பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138


உட்கார்ந்தார் டாக்டர். மறுகணமே கார் விருட்டென்று புறப்பட்டுச் சென்றது.

“கோனாரே, என்ன நடந்தது. என்ன சொல்லுமேன்!” என்று அழுகையுடன் அழுகையாய்ப் பதறிப் போய்க் கேட்டாள் தங்கம்மாள்.

இருளப்பக் கோனார் பதிலே கூறாமல் மடமட வென்று மாடிப்படி வழியாக மேலேறிச் சென்றார்; அவசர அவசரமாகப் பூஜையறைக் கதவருகே சென்று கதவைப் பலங்கொண்ட மட்டும் தட்டினார். “முதலாளி, முதலாளி” என்று கத்தினார். பிறகு இன்னது செய்வதென்று தெரியாமல் மொட்டை மாடிக்கு ஓடி, பூஜையறை வெளிச்சுவருக்கு மேலாக இருந்த உயரமான ஜன்னலின் மீது தொத்திநின்று, பூஜையறைக்குள்ளே பார்வையைக் செலுத்தினார்.

பூஜையறைக்குள்ளே கிழக்கே பார்த்திருக்கும் பூஜை மாடத்துக்கு எதிரே முகட்டின் உத்திரக்கட்டையிலிருந்து ஒரு முழக்கயிற்றில் கைலாச முதலியாரின் உயிரற்ற சடலம் ஊசலாடிக் கொண்டிருந்தது; அந்தக் காட்சிக்குப் பின்னணி தீட்டியதுபோல், உதட்டில் ததும்பிய புன்னகை மறையாமல், கண்களிலே துள்ளும் களிப்புக்குறையாமல், வள்ளி தெய்வானைமீது போட்ட கையை எடுக்காமல் அபயஸ்தானம் காட்டும் கையைச் சுருட்டி மடக்காமல், நிர்க்குண நிச்சிந்தையனாய் நிற்கும் பன்னிருகைவேலனின் திருவுருவச் சித்திரம் பூஜை மாடத்தில் தொங்கிக் கொண்டிருந்தது!


14


கைலாச முதலியாரின் மரணச் செய்தி காட்டுத்தீ போல் பரவியது.

சிறிது நேரத்தில் ஆணும் பெண்ணுமாக அந்தத் தெருவிலுள்ளவர்கள் அனைவரும் அங்கு கூடிவிட்டார்கள்;