பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

139


தன்னந் தனிமையில் நிர்க்கதியாக அழுது புலம்பித் தவித்த தங்கம்மாளோடு வந்திருந்த பெண்கள் அனைவரும் சேர்ந்து அழத்தொடங்கி, தங்கள் அனுதாபத்தைக் காட்டிக் கொண்டார்கள். வந்திருந்த ஆண்களின் துணையோடு இருளப்பக் கோனார் மாடியிலுள்ள பூஜையறைக் கதவை உடைத்து, கயிற்றை அறுத்து, கைலாச முதலியாரின் உயிரற்ற சடலத்தைக் கீழே இறக்கிக் கொண்டு வந்தார். தன்னைக் கைப்பிடித்து மணந்த கணவனின் உடலைக் கண்டதும், தங்கம் அதன் மீது விழுந்து முகத்திலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறிப் புலம்பினாள்.

கைலாச முதலியார் தூக்கிட்டு இறந்துபோன போதிலும் அவரது முகம் விகாரமாயிருக்கவில்லை; சோர்ந்து படுத்துறங்கும் நோயாளியைப் போல் அவர் தோற்றமளித்தார்; வாயும் கைகளும் கிட்டித்து இறுகிப் போயிருந்தன; முகத்தில் நிம்மதி ததும்புவது போலிருந்தது. கடன்காரர்களையும், கஷ்டங்களையும், கடவுளையும் ஏமாற்றிவிட்டுத் தப்பித்துச் செல்கிறோம் என்ற இறுதிநேர எண்ணத்தில் பிறந்த நிம்மதியோ, என்னவோ?

தந்தையும் மகனும் ஒரே தினத்தில் காலன் வாய்ப்பட்ட கோரத்தைக்கண்டு வந்திருந்த பெண்கள் கண் கலங்கினார்கள்; தங்கள் தாலிப் பாக்கியம் எப்படி எப்படியோ என்ற அச்சத்தால் உள்ளம் நடுங்கினார்கள்! அந்தப் பயங்கரக் காட்சியைக் காணவே அஞ்சினார்கள்; கூசினார்கள்.

வீட்டுக்குள்ளிருந்து பெண்களின் அழுகையும் ஓலமும் இடைவிடாது சப்திக்கும் கடலலையைப் போல், கும்மென்று இரைந்து எதிராலித்துக் கொண்டிருந்தது. இருளப்பக் கோனார் இன்னது செய்வதெனத் தெரியாமல், வெளி முற்றத்தில் ஒரு மூலையில் உட்கார்ந்து வாயில் வேட்டியை வைத்துப் பொத்திக் கொண்டு, விக்கி விக்கி அழுது கொண்டிருந்தார். வந்திருந்த தறிகாரர்களும், வியாபாரிகளும் வெளி முற்றத்தில் கிடந்த பெஞ்சியிலும்