பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

141


செத்தவுங்க முகத்தைப் பார்க்கக்கூட அவனுக்குக் குடுத்து வைக்கலெ போலிருக்கு" என்றது மற்றொரு குரல்

"அதுவும் ஒரு வழிக்கு நல்லதுதான். இந்தக் கண்றாவியைப் பார்க்கிறதை விட" என்று பதிலளித்தது மற்றொன்று.

வந்திருந்தவர்கள் அனைவரும் இவ்வாறு தத்தம் அபிப்பிராயங்களைப் பரிமாறி, மனத்தைச் சாந்தி செய்து கொண்டிருந்த வேளையில் வெளியே கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது. தொடர்ந்து, அவசர அவசரமாக உள்ளே ஓடிவந்தான் சங்கர்.

சங்கர் உள்ளே வந்ததும் ஓரிருவர் பெரிய முதலாளியின் மகன் என்ற காரணத்துக்காக, "வாங்க தம்பி" என்று வரவேற்றுக் கொண்டனர்,

சங்கர் எதையுமே காதில் வாங்கிக்கொள்ளாமல் நேராக உள்ளே வந்தான்; சங்கரைக் கண்டதும் இருளப்பக் கோனார் வாய்விட்டுக் கோவென்று அலறி விட்டார்,

"கோனாரே, அழுது என்ன பயன்? நடந்தது நடந்து விட்டது. இனி ஆகவேண்டியதை கவனியுங்கள்" என்று தேற்றியவாறே சங்கர் வீட்டுக்குள் சென்று, நடுவீட்டில் கிடத்திப் போட்டிருக்கும் சடலங்களை கவனித்தான்.

"பாருடாப்பா, சங்கர் பாரு, எங்க அலங்கோலத்தை!" என்று பயங்கரமாக அலறிக் கதறினாள் தங்கம்மாள்.

சங்கருக்கு நெஞ்சில் வேதனை முட்டிக்கொண்டு வந்தது; அவன் கண்கள் கலங்கிச் சிவந்தன; கண்ணீர் துளித்துச் சொட்டியது. பிரமை பிடித்தவன் போல் அந்தப் பிணங்களை ஒரு நிமிஷ நேரம் பார்த்து விட்டு, கண்ணைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

வெளியே வந்த சங்கர் இருளப்பக் கோனாரைக் கூப்பிட்டு, "என்ன கோனார்; செலவுக்குப் பணம் இருக்கா?" என்று ரகசியமாகக் கேட்டான். கோனார் இன்னது