உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

145


திகைப்புணர்ச்சியிலிருந்து விடுபட்ட சங்கர் டாக்டரின் பதிலுக்கு என்ன மறுமொழி கூறுவதென்று தெரியாமல் ஒரு கணம் மௌனமாயிருந்தான். ஆனால் மறுகணமே அவன் டாக்டரை நோக்கி "டாக்டர் ஸார், மணியைத் தாங்கள் தான் காப்பாற்ற வேண்டும். என்ன செலவானாலும் நான் தருகிறேன்" என்று ஆவலோடு கூறினான்.

சங்கரின் பேச்சைக் கேட்டு டாக்டர் மெல்லச் சிரித்துக் கொண்டார். ஒரு நிமிஷ மௌனத்துக்குப் பிறகு அவர் மிகுந்த நிதானத்தோடு சங்கருக்குப் பதில் சொல்ல முனைந்தார்.

"சங்கர் பிறவிகளில் உயர்ந்தவனான மனிதனை நோய்நொடியிலிருந்தும், மரணத்திலிருந்தும் காப்பாற்றும் பணியை நான் செய்வதாக நீங்கள் தான் ஒருநாள் என்னைப் பாராட்டினீர்கள். ஞாபகமிருக்கிறதா? உங்கள் நண்பரைக் காப்பாற்றிக் கொடுப்பதும் அந்தப் பணியில் ஒரு பகுதிதானே. அது என் கடமையில்லையா? 'மனிதனுக்கு மனிதன் தான் உயர்ந்தவன்' என்றுதான் நீங்கள் அன்று சொன்னீர்களே ஒழிய பணம்தான் பெரிது என்று சொல்லவில்லையே"

டாக்டரின் சமத்காரமான பதிலைக் கேட்ட பிறகு தான் சங்கருக்குத் தன் தவறு புரிந்தது; இவ்வளவு தூரம் நெருங்கிப் பழகும் ஒரு நண்பரிடம் எடுத்த எடுப்பில் பணத்தைப்பற்றிப் பிரஸ்தாபித்திருக்கக் கூடாதுதான் என்று அவன் உள்ளூர உணர்ந்து கொண்டான்; எனவே அவன் தன் சொல்லுக்கு‌ நாணிலேசாகத் தலைகவிழ்ந்தான்.

"சங்கர், ஸ்மோக் பண்ணுறீங்களா?" என்று அன்போடு கேட்டவாறே தமது சிகரெட்கேஸை நீட்டினார் டாக்டர்.

"வேண்டாம், டாக்டர்" என்று கூறியவாறே தலை நிமிர்ந்தான் சங்கர்.