பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148


நல்ல ஓய்வும் சாப்பாடும் இருந்தால் இங்கு வருவார்களா?"

"உங்கள் அனுபவத்தைக் கொண்டே பாருங்கள். நாட்டு நிலைமையின் பிரதிபலிப்புத்தானே உங்கள் அனுபவம் இல்லையா?" என்று கூறியவாறே சங்கர் கைக் கடிகாரத்தைப் பார்த்து விட்டு இடத்தைவிட்டு எழுந்தான்.

"என்ன புறப்பட்டாச்சா?".

"ஆமாம் டாக்டர் மணி வீட்டுக்குப் போகணும். சரி, மணியை எப்போது பார்க்கலாம்?"

"காலையில் வாருங்கள் சொல்லுகிறேன்" என்றுபதில் கூறியவாறே கையிலிருந்த சிசுரெட்டை அணைத்துவிட்டு சங்கரை வழியனுப்புவதற்காக இடத்தை விட்டு எழுந்து வெளியே வந்தார் டாக்டர்.

இருவரும் வெளியே வந்த சமயத்தில் எதிரே கமலா அவசர அவசரமாக வந்து சேர்ந்தாள். அவளது முக மெல்லாம் வியர்த்து விதிர்விதிர்த்துக் களையிழந்து போயிருந்தது. ஆத்திரமும் ஆவலும் கொண்ட கமலாவின் முகத்தில் படிந்திருந்த சோகத் திரை சங்கரைக் கண்டதும் திடீரென்று விலகியது.

படிக்கட்டில் ஏறியும் ஏறாமலும்‌ "அண்ணா அத்தானுக்கு ஒன்றுமில்லையே!" என்று ஆத்திரத்தோடு கேட்டாள் கமலா.

டாக்டர் அவளுக்குப் பதிலளிக்க முந்திக்கொண்டார்.

"பயப்படாதேம்மா உன் அத்தான் உயிருக்கு நான் ஜவாப்தாரி!"

கமலா தன்னை மீறியெழுந்த நாணத்தோடும் உதட்டில் தோன்றிய புன்னகையோடும் "தாங்க்யூ டாக்டர்!" என்று வாய்க்குள்ளாகவே சொல்லிக் கொண்டாள்.

சங்கர் அவளருகில் சென்று "வா கமலா மணிக்கு ஒன்றும் ஆபத்தில்லை" என்று கூறியவாறே காரின் கதவைத் திறந்தான்.