பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150


எங்கோயிருந்து பயமுறுத்தும் அச்சவுணர்ச்சியும் அவர் களுக்கு ஏற்பட்டன. வேறு சிலர் பத்திரிகை பார்ப்பதற்காக வராவிட்டாலும், வேறு பல காரணங்களை முன்னிட்டு அங்குக்குழுமிவந்தார்கள். சிலர் நாள் தவறாது லோகநாயகி அம்மனைச் சேவித்து, தமது கஷ்டங்களையெல்லாம் அவளோடு மானசீகமாக எடுத்துச் சொல்லி‌ ஆத்ம சாந்தி தேடிக்கொள்ள வந்தார்கள். இன்னும் சிலர் வீடு தேடிவந்து விரட்டுகின்ற கடன்காரர்களிடமிருந்தும், வீட்டுத் தேவைகளுக்காக நச்சரிக்கும் மனைவிமார்களிடமிருந்தும், "அப்பா ஒரு காலணா" என்று அழுது புலம்பும் குழந்தைகளிடமிருந்தும், சில மணி நேரமாவது தப்பித்து விலகி நிச்சிந்தையாகயிருக்கலாம் என்று கருதி வந்தார்கள். வேறுசிலர் ஒரு வேளை வெற்றிலையை வாங்கி மென்று விழுங்கியோ அல்லது ஒரு காரச் சுருட்டை வாங்கிப் புகைத்து புகையை உள்ளிழுத்து ஜீரணிப்பதன் மூலமோ, வயிற்றுப் பசியைச் சாகடித்து மந்தித்துப் போகச் செய்து அன்றைய ராத்திரிச் சாப்பாட்டுக் கவலையைத் தீர்த்துக் கொள்ள எண்ணியும் வருவதுண்டு.

கடைக்கார மூப்பனாருக்கும் முன்பெல்லாம் சுமாராகவாவது வியாபாரம் நடந்து வந்தது. இப்போதோ? இப்போது கடைக்கார மூப்பனார் தமது வாடிக்கைக்காரர்களைப் பார்த்து "ஏனய்யா வெத்திலை தரட்டுமா? போடுதியளா? என்று வாய்விட்டுக் கேட்டு விற்பனை செய்ய முயன்றாலும் கூட பலிப்பதில்லை. "என்ன மூப்பனார் வாள்? காசு, குடுக்கிற அன்னிக்கி வாங்கிக் கிடுவியளா?” என் தான் பெரும்பாலும் அவருக்குப் பதில் கிடைத்தது. முன்பெல்லாம் காசை எதிர்பார்க்காமலே ஓசி வெற்றிலை கொடுத்து வந்தவர்களை உபசரிப்பார் மூப்பனார், நெசவாளிகளுக்கு ஓசி வெற்றிலை வாங்கிப் போடுவதற்குக் கூசிக்கொண்டே "காலணா யாபாரம், இதிலே யார் வாரிக் கட்டிக்கிட்டுப் போகப் போறோம்? என்று மெட்டாகக் கூறிவிட்டுக் காசைக் கொடுத்து விடுவார்கள். இப்போதோ ஓசிக்கு வெற்றிலை