பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154


தம்மை இரையாக்கினார்கள். ஆனால் நாளாரம்பத்தில் அந்தக் கூலிக்கும் கூட ஆபத்து ஏற்பட்டு விட்டது.

நெசவாளிகள் நிலைமை நாளாவட்டத்தில் கூணித்துக் கேவலமடையத் தொடங்கி விட்டது. வயிற்றுப் பசியையும் வாழ்க்கைத் தேவைகளையும் அவர்கள் வீட்டுக்குள்ளேயே மூடிவைத் திருக்க முடியவில்லை. நெருக்கடி முற்ற முற்ற அவர்கள் கடன் வாங்கிப் பிழைத்தார்கள்.கடன் வாங்குவதற்குள்ள வழிகளெல்லாம் அடைபட்டுப்போனபின் பண்ட பாத்திரங்களை, நகைகளை அடகு வைத்தும் விற்றும் வயிற்றைக் கழுவினார்கள்.சிலர் தங்கள் தறிச் சாமான்களையும் கூட விற்று விட்டனர். வீடு வாசல் நிலம் உள்ளவர்கள் அவற்றையும் விற்றுத்தீர்த்தார்கள். அரைப்பட்டினிகுறைப்பட்டினியோடு உடம்பில் உயிரைத் தாங்கிக் கொண்டிருந்தால் விடிவுகாலம் பிறந்ததும், மீண்டும் தளிர்த்துக் கொள்ளலாம் என்ற ஒரே நப்பாசையோடு, நம்பிக்கையோடு அவர்கள் பட்டுக் கருகிக்கொண்டு வந்தார்கள். நெசவாளிகளின் பிள்ளைகள் பள்ளிக்கூடப் படிப்பை விட்டுவிட்டு கடை கண்ணிகளில் வேலை பார்த்தார்கள்.பெண்கள் அக்கம் பக்கத்துத் தெருக்களில் பத்துப் பாத்திரம் துலக்கியும், வீட்டு வேலைகளைச் செய்தும் பிழைக்க முன் வந்தார்கள். ஒன்றிரண்டு நெசவாளிகள் வீட்டுக் கஷ்டம் தாங்க முடியாது, 'வேலை பார்த்துவிட்டு வந்து கூட்டிச்செல்கிறேன்' என்ற நம்பிக்கை மொழி ஒன்றையே தம் பெண்டு பிள்ளைகளிடம் துணையாக விட்டு, பரதேசம் சென்றுவிட்டார்கள். சுருங்கச் சொன்னால், அவர்கள் நாளுக்குநாள் அணு அணுவாகச் செத்துக் கொண்டிருந்தார்கள். செத்துக் கொண்டிருக்கும் சீவனை இழுத்து பிடித்து நிறுத்துவதற்காகப் பிச்சை எடுத்தார்கள். பிழைப்புத்தேடிச்சென்றார்கள் மோசடிகள் செய்தார்கள் என்றாலும், அவர்கள் செத்துக் கொண்டே தான் இருந்தார்கள்.

கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைப் பிரச்னை நெருக்கடியான கட்டத்துக்கு வந்த சமயத்தில் தான் கைலாச