பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்கம் வச்சி என்னமா வேலை செய்யறாங்க தெரியுமா? நானும் ரொம்ப நாளா யோசிச்சுக்கிட்டுதான் இருந்தேன். நாமும் சங்கம் வச்சிற வேண்டியதுதான். இப்படி நித்த நித்தம் பைத்தியம் பிடிச்ச நாய் மாதிரி சுத்தி சுத்தி வந்து சாகிறதை விட, வாழ வழி தேடும் போராட்டத்திலே செத்துத் தொலைஞ்சாலும் பரவாயில்ல.சாவாவது நல்ல சாவா இருக்கும்!"

வடிவேலு முதலியாரின் உணர்ச்சியும் உத்வேகமும் நிறைந்த வார்த்தைகள் அங்கிருந்தவர்கள் உள்ளங்களையெல்லாம் மின்சாரத்தால் தாக்கியது போல் உலுக்கிக் குலுக்கி விட்டன.

"அதுவும் சரிதான்" என்று மெல்லிய குரலில் ஆமோதித்தார் பெரியவர்.

அதே நேரத்தில் அம்மன் கோயில் ஓதுவார் மூர்த்தி அந்த நேர பூஜை செய்து மணியடிக்கும் ஓசையும் கண கணவென்று விம்மி ஒலித்துப் பரவியது.

"அம்மன்கூட வாக்குக் குடுத்திட்டா, பயப்படாமெ, தம்பி சொல்றபடிக் கேளுங்க" என்றார் முதியவர்.

எல்லோருடைய முகத்திலும் திடீரென்று ஒரு நிம்மதியும் தெளிவும் பிறந்தது.

"அப்ப சரி, சங்கரா! சங்கம் வைக்கிறதுக்கு நீதான் எல்லாம் சொல்லிக் கொடுக்கணும் தெரிஞ்சிதா?" என்று சங்கரை வேண்டிக் கொண்டார் வடிவேலு முதலியார்,

பூரணப் பொலிவும் திருப்தியும் நிறைந்த முகத்தோடு, 'நான் எப்பவும் தயார்' என்று கூறியவாறே சங்கர் மண்டபத்தைவிட்டு எழுந்தான்.

கீழ்த் திசை வானத்தில் பூர்ண சந்திரோதயத்தின் செக்கர் ஒளி மெல்ல மெல்ல இருளை விரட்டியடித்துக் கொண்டு மேலேறத் தொடங்கியது.