பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

165




16

"என்னம்மா கமலா, மணியும் ஒன்பது அடிக்கப் போவுது. இன்னும் சாப்பிடாம, இப்படியே உக்காந்திருந்தா? வாம்மா சாப்பிட!" என்று கமலாவின் தலையைத் தடவிக் கொடுத்தவாறே அன்போடு கூப்பிட்டாள் தர்மாம்பாள்.

"எனக்குப் பசியில்லேம்மா" என்று கமலா துணிந்து பொய் சொன்னாள்.

"பொய்தானே சொல்றே? மத்தியானம் கூட நீ சரியாச் சாப்பிடலையே. அண்ணன் எப்பயெப்ப வர்ரானோ? வாம்மா சாப்பிட மணிக்கு ஒரு குறையும் வராது" என்று மீண்டும் தேற்றி, கமலாவை வற்புறுத்தி அழைத்தாள் தாய்.

கமலாவோ இருந்த இடத்தை விட்டு அசையவே மறுத்து விட்டாள்.

"சொல்லத்தானே செய்யலாம். இப்படி முரண்டு பிடிச்சா?"என்று சலிப்பும் வருத்தமும் தோன்றக்கூறிவிட்டு, தர்மாம்பாள் திரும்பிச் சென்றாள்.

கமலா அந்த நாற்காலியிலேயே அசையாமல் உட்கார்ந்து, மேஜை மீதுள்ள விளக்கையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள், மேஜைமீது ஒரு புத்தகம் திறந்த வாக்கில் கிடந்தது. கமலாவின் மனமோ ஒரு நிலை கொள்ளாமல் அலை பாய்ந்து கொண்டிருந்தது. அன்று காலையில் ஆஸ்பத்திரிக்குச் சென்று விட்டு வந்த சங்கர் மணிக்குப் பிரக்ஞை வந்து விட்டதாகவும், எனினும் அவன் ஜன்னி கண்டது போல் ஏதேதோ பிதற்றுவதாகவும், ஜுரமும் அடிப்பதாகவும் தெரிவித்தாள். அதைக் கேள்விப் பட்டதிலிருந்தே, கமலாவுக்கு மனம் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி அலைக்கழியத் தொடங்கி விட்டது. மத்தியானம் அவளுக்குச் சாப்பாடே செல்லவில்லை;