பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

167


டத்தை- நிறுத்துவதற்காக, கமலா புத்தகத்தை எடுத்துப் புரட்டினாள். அதில் கறுப்பு மையம் வெள்ளைத் தாளும் தான் தெரிந்தனவேயன்றி எழுத்துக்கள் தெரியவில்லை; எழுத்துக்கள் தெரிந்தாலும், அதன் வாக்கியச் சேர்க்கைகளோ பொருள் அமைதியோ அவள் மண்டைக்குள் ஏறவே இல்லை . கமலா 'ஆயிரம் தடவை' புத்தகத்தை திறந்தாள் ஆயிரம் தடவை மூடினாள். புத்தகத்தில் மனம் செல்லாதனால் புத்தகத்தை மூடிவிட்டு, விளக்கையும் அணைத்து விட்டு இருளின் துணையிலே இருந்தாள்.

அறையிலிருந்த கண்ணாடி ஜன்னல் வழியாக, தெருவிலுள்ள மின்சாரக்கம்பவிளக்கு புகை மூட்டம் போல் ஒளி செய்தது; வெளியே சினுசிணுத்துப் பெய்து கொண்டிருந்த சிறுதூற்றல்கன்ணாடி ஜன்னல் மீது துளித்துளியாகப் படருவதும், பின்னர் அந்தத் துளிகள் ஒன்று சேர்ந்து தாரை தாரையாக மாறுவதும் அவள் கண்ணைக் கவர்ந்தது. எனினும் அந்தக் காட்சியைக் கண்டெழுந்த அவளது கற்பனை மீண்டும் அவள் மனத்தைக்கட்டவிழ்த்து விட்டது; "ஒருவேளை இதோ அழுது சிணுங்கி, ஜன்னல் கண்ணாடிமீது தாரை தாரையாகக் கண்ணீர் சிந்தும் மழைநீர் எனக்கு வரவிருக்கும் ஆபத்தின் அறிகுறி தானோ?."

கமலாவுக்கு இந்த மாதிரியான மூடத்தனங்களிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. எனினும் அவள் இருந்த நிலையில் தனது மூடத்தனத்தைப் பற்றியோ, புத்திசாலித் தனத்தைப் பற்றியோ ஆராய்ச்சி செய்ய இயலவில்லை.

எனவே கமலா அந்தக் கண்ணாடியிலிருந்து கவனத்தை வேறு பக்கம் திரும்பினாள். சங்கர் வரும் காலடி ஓசை கேட்கிறதா என்றுகாதைத் தீட்டிவைத்துக் கொண்டு காத்திருந்தாள். ஆனால் மழைத்தண்ணீர் சொட்டுச் சொட்டென்று முற்றத்திலிருந்த விசிறி வாழையிலைகளில் விழும் சப்தத்தையும், உள்வீட்டிலிருந்த கடிகாரம் தாள அளவோடு சப்திக்கும் ஒலியையும் தவிர வேறு அரவமே இல்லை.