பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170


"ஏண்டாப்பா சங்கர், மணிக்கு ஒண்ணும் பயமில்லையே!" என்று கேட்டாள்.

"அதெல்லாம் ஒண்ணும் இல்லேம்மா. இன்னும் ஒரு வாரத்துக்குள்ளே அவன் ஆஸ்பத்தியிலேருந்து வந்திடுவான்" என்று கூறிக்கொண்டே, சோற்றை வாயில் வைக்கப்போன சங்கர் ஏதோ நினைத்தவனாக மீண்டும் பேசினான்: "அப்பாவின் பேராசை ஒரு குடும்பத்தையே சீர்குலைத்துவிட்டது. இன்னும் எத்தனைகுடித்தனங்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளப் போகிறார்களோ?அம்மா, ஜனங்கள் என்றைக்கும் இப்படியே இருக்க மாட்டார்கள். அவர்கள் விழிப்படையும் காலத்தில்...."

சங்கர் அந்தக் காலத்தை மனத்தில் கற்பனை செய்து பார்த்தவனாகப் பெருமூச்செறிந்தான்.

தன் கணவனைப்பற்றிக்குறை கூறுவதைக் கண்டதும் தர்மாம்பாளின் உள்ளுணர்ச்சி பதிவிசுவாசத்தால் ஒரு கணம் குன்றியது. அதை அவள் வெளிக் காட்டிக் கொள்ளாமலே. "சங்கர், என்ன இருந்தாலும், நீ இப்படியெல்வாய் பேசி, அப்பா மனசைப் புண்படுத்தக் கூடாது. மணியோட அப்பா விசயமாய் இவ்வளவு கடுமையாய் நடந்திருக்கக் கூடாதுன்னு நான் கூட அப்பாக்கிட்டே சொன்னேன்." என்று பேசத் தொடங்கினாள்.

சங்கர் தன் தாயின் மனவுணர்ச்சியை உணர்ந்தவனாகவோ, அவள் கூறுவதை நம்புபவனாகவோ காணப்படவில்லை. வாயில் போட்டிருந்த சாதத்தை மென்று விழுங்கி விட்டு, ஒரு மடக்குத் தண்ணீரும் குடித்துவிட்டு, தர்மாம்பாளுக்குப் பதில் சொல்ல முனைந்தான்.

"என்னம்மா சொன்னே? பணக்காரனுக்கு என்றைக்கும் பரிதாப உணர்ச்சி பிறந்து விடாது, அம்மா. பணத்தின் பேராசை இந்த உலகத்து மக்களை எத்தனை முறை யுத்தத்துக்கு ஆளாக்கிரத்தம் குடித்திருக்கிறது தெரியுமா?