பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

171


பணக்காரனுக்கு வெளி நாக்கு சர்க்கரை; உள் நாக்கு விஷம் அம்மா, விஷம்! தெரியுமா?"

தர்மாம்பாளுக்கு அவன் பேச்சைக்கேட்க என்னவோ போலிருந்தது.

"சரிதாண்டாப்பா, சங்கர். சீக்கிரம் சாப்பிட்டுட்டு எழுந்திரு. நல்லாத்தான் பேசறே? இலை முன்னாலே உக்காந்துக்கிட்டு, ரத்தம், விஷம் அப்படி இப்படின்னு" என்று செல்லமாகக் கடிந்து கொண்டாள்.

தன் தாயின் பதிலைக் கேட்டுக் 'களுக்'கென்று சிரித்தாள் கமலா.

"அண்ணா , உன்னைப் பேச்சிலே மடக்க முடியாதுன்னு பெருமை அடிச்சிக்கிடுவியே, இப்போ அம்மா உன்னை மடக்கிப்புட்டாளே!" என்று சொல்லிக் கண்ணைச் சிமிட்டினாள் கமலா.

"வாயாடி" என்று கூறி நிலைமையைச் சமாளித்தான் சங்கர்.

சாப்பிட்டு முடிந்தபின் மூவரும் நடுஹாலுக்கு வந்தனர். சங்கர் கமலாவைப் படுக்கப் போகச் சொல்வி விட்டு, தன் தாயிடம் திரும்பி, "அம்மா நான் மணி வீட்டு வரையிலும் போய், தங்கம்மா அத்தைக்கு மணியைப் பத்தி தகவல் தெரிவிச்சிட்டு வந்திடுறேன்" என்று கூறிவிட்டுக் கிளம்பினான்.

"உன் அத்தையை நீதான் மெச்சிக்கிடணும். அன்னிக்கி நான் துட்டிகேக்கப்போனதும், அவள் என்னை முகம் கொடுத்துக்கூடப் பார்க்கலெ!" என்று சொல்லிப் பெருமூச்செரிந்தாள் தர்மாம்பாள்.

"எப்படியம்மா பார்ப்பாள்? நம்ம அப்பா வாலேதானே அவளுக்கு இந்தக் கதி நேர்ந்தது?”