பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172


சங்கரின் பேச்சு மீண்டும் பழைய தடத்துக்குச் செல்வதையுணர்ந்த தர்மாம்பாள், "சரி, சரி, போயிட்டு, சீக்கிரமா வந்து சேரு மணி பத்தாச்சு" என்று சொல்லி அவனை வழியனுப்பிவைத்தாள்.

சங்கர் சென்ற சிறிது நேரத்துக்குள்ளாகவே தாதுலிங்க முதலியார் வந்து சேர்ந்தார். வரும்போதே, "சங்கர் எங்கே?” என்ற கேள்விதான் அவர் வாயிலிருந்து பீறிட்டு வெடித்தது.

"ஏன்? என்ன விசயம்?” என்று கேட்டு நிறுத்தினாள் தர்மாம்பாள்.

"என்ன விசயமா? இப்பதான் அந்தச் சுப்பையா முதலி ஸ்டோருக்கு வந்து சொல்லிட்டுப் போனான். இவன் என்னமோ தறிகாரங்களையெல்லாம் கூட்டி வச்சிக்கிட்டு, சங்கம்வைக்கணும், அதுவைக்கணும், இது வைக்கணும்ணு சொல்லிக்கிட்டிருந்தானாம். என்னைப்பத்தி வேறே, என்னென்னமோ சொன்னானாம் இருந்திருந்து எனக்குன்னு வந்து முளைச்சானே, இவன்! ஒத்தைக்கு 'ஒரு பிள்ளையேன்னு பார்க்கிறேன். இல்லேன்னா, தொலைச்சித் தலை முழுகிட்டு 'அக்கடா'ன்னு. இருந்திருவேன். எங்கே அவன்?" என்று படபடத்துப் பேசினார் தாதுலிங்க முதலியார்,

"அவன் இன்னம் வரலெ" என்று துணிந்து பொய் சொன்னாள் தர்மாம்பாள்.

அறைக்குள்ளிருந்து இத்தனையையும் ரகசியமாகக் காது கொடுத்துக் கேட்டிருந்த கமலா "அப்பா! இனிமேல் நீங்கள் ஜனங்களையும் ஏமாற்ற முடியாது, என்னையும் ஏமாற்ற முடியாது!"என்று குதூகலத்துடன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

உள் வீட்டுக் கடிகாரம்'டங்'கென்று பத்தரை அடித்தது.