பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174


எனத் தெரியாமல் திகைத்தான்; சங்கரின் நிலைமையைக் கண்ட டாக்டர் மணியின் உடம்பைப் பிடித்துக் குலுக்கியவாறே, "மணி, என்னைப் பாருங்கள்." என்று சொன்னார்.

மணி டாக்டரை‌ வெறித்துப்பார்த்தான்.

"மணி, நான் யார்?"

"நீங்களா? டாக்டர்!சார்! என் அப்பா."

டாக்டர் குறுக்கிட்டார்: "நான் தான் டாக்டர் தெரிந்ததா?"

"ஆமாம் டாக்டர்!" என்று அமைதியுடன் பதில் அளித்தான் மணி.

"மிஸ்டர் மணி, நீங்கள் இப்போது என் பேஷியண்ட், பாருங்கள். இது ஆஸ்பத்திரிக் கட்டில்; இது மருந்து பாட்டில், இது தெர்மாமீட்டர் தெரிகிறதா?" என்று ஒவ்வொரு பொருளாக அவனுக்குச் சுட்டிக் காட்டினார். மணி ஒவ்வொன்றையும் திருகத் திருகப் பார்த்தான்.

"இங்கே எப்படி வந்தேன் டாக்டர்?"என்று பதறினான் மணி.

டாக்டர் அவன் கையை எடுத்து அவன் தலையில் கட்டியிருக்கும் மண்டைக் கட்டைத் தொட்டுணரச் செய்தார்.

"உங்கள் மண்டையில் கட்டுப் போட்டிருக்கிறது. தெரிந்ததா? உங்களுக்கு மண்டையில் அடிபட்டு விட்டது! அதுதான் இங்கு கொண்டு வந்தோம்."

"டாக்டர், என் அப்பா ?"

"அப்பாதானே! உங்கள் தகப்பனார் தற்கொலை செய்துகொண்டதை நீங்கள் பார்க்கவில்லை?பார்த்தவுடன் கால் தவறிக் கீழே விழவில்லை? ஞாபகம் இருக்கிறதா?"