பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178


வாழ்க்கையின் குரூர வசீகரங்களைக் கண்டுணர்ந்தால் அவன் உள்ளத்திலே புதைந்து கிடக்கும் தர்மாவேசம், உலகில் சத்தியத்தை நிர்த்தாரணம் செய்வதற்காகச் சீறியெழுந்தால் என்றெல்லாம் சங்கர் நினைத்ததுண்டு.

'ஆனால் வாழ்க்கை என்பது கற்றுக்கொடுத்து வருவதில்லை; சூழ்நிலைதான் வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கும்.'

"அப்படியானால், மணிக்கு இப்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை, இப்போது ஏற்பட்டுள்ள அதிர்ச்சி, அவனுக்கு உலகைப்பற்றிய பிரக்ஞையைக் கொண்டுவருமா?மணியின் கண்களை அவனது தந்தையின் மரணம் திறந்து விடுமா...?'

சங்கர் மணியைப்பற்றி ஏதேதோ சிந்தித்துக் கொண்டிருந்தான்.

"என்ன சங்கர், பலத்த யோசனை?" என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார் டாக்டர்.

"எப்படி இருக்கிறது டாக்டர்?" என்று தன்னிலை திரும்பிய சங்கர் ஆத்திரத்தோடு கேட்டான்.

"ஒன்றும் பயமில்லை தம்பி இறந்த விஷயம் கூட அவருக்குத் தெரிந்து விட்டது. இனிமேல் ஒன்றும் ஆபத்தில்லை. அவருக்குத் தூக்க மருந்து கொடுத்திருக்கிறேன். நன்றாகத் தூங்கட்டும், நாளை அல்லது நாளை நின்று எல்லாம் சரியாகிவிடும்" என்று கூறினார்.

சங்கருக்கு மனம் நிம்மதியடைந்தது.

டாக்டர் கூறியது போலவே மணிக்கு இரண்டு நாட்களில் சித்தம் தெளிந்துவிட்டது. அன்று மாலையில் அவன் தூங்கி விழித்தபோது எதிரே டாக்டர் நடராஜன் தான் நின்று கொண்டிருந்தார்.