பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180



மணி அன்றிரவு நன்றாகத் தூங்கினான்.

ஆஸ்பத்திரிக் கடிகாரம் ஏழுமணி அடித்தது, காலை இளஞ்சூரியனின் நீளக்கதிர்க் கரங்கள் ஜன்னலின் வழியாக நீண்டு வந்து மணியை உசுப்பி எழுப்பின; நெடுமூச்சு வாங்கி நிம்மதியாய்த் தாங்கிக் கொண்டிருந்த மணி கதிரொளியின் கதகதப்பால் தன்னுணர்வு பெற்றுத் தூக்கம் கலைந்தான்; எனினும் பலவீனப்பட்டு உள்ளுக்குள் குளிரால் நடுக்குவது போன்றிருந்த அவன் உடம்புக்கு, சூரிய ஒளி புது வலுவையும் புதுச் சுகத்தையும் ஊட்டுவது போலிருந்தது. தன்னைப் போர்த்திக் கிடந்த போர்வையின் ஸ்பரிச சுகத்தையும், போர்வையைத் தாண்டி உடலை வந்து தொட்டுத் தடவும் கதகதப்பின் இன்ப அரவணைப்பையும் அனுபவித்து உள்ளம் குளிர்ந்தவனாக அவன் கண்களைத் திறந்தான்.

பொழுது புலர்ந்து ஆஸ்பத்திரி எங்கும் ஒளிப் பிரவாகம் நிரம்பி வழிந்தது.

கண்ணை விழித்தவாறு படுத்திருந்த மணியை 'கீச் கீச்' என்ற ஒரு ஜோடி அடைக்கலாங் குருவிகளின் சத்தம் கவர்ந்திழுத்தது. ஆஸ்பத்திரி ஜன்னலுக்கு மேலே காற்று வரப்போக வைத்திருந்த ஒரு வட்டப் பொந்தில் அந்தக் குருவிகள் கூடு கட்ட முயன்று கொண்டிருந்தன. எங்கு இருந்தோ வைக்கோல் துரும்புகளைக் கொண்டுவந்து சேர்ப்பதும், அந்தத் துரும்புகள் எத்தனை முறை கீழே தவறி விழுந்த போதிலும் விடாமுயற்சியோடு அவற்றை மீண்டும் மேலே கொண்டு போய்ச் சேர்ப்பதுமாக இருந்தன. அந்தக் குருவிகள் கீச் கீச் சென்று கத்திக் கொண்டு. அவை அங்குமிங்கும் ஜிவ்வென்று பறந்து திரிவதை மணி வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

"இந்தக் குருவிகளுக்குள்ள தைரியமும் விடா முயற்சியும் எனக்கிருந்தால்." என்று தன்னையும் மறந்து அவன் உள்ளம் ஒருகணம் ஏங்கியது. மறுகணமே டாக்டர்