பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182



"பயப்படாதீங்க, தம்பி நடந்தது நடந்து விட்டது. இந்தக் கட்டை உசுரோடே இருக்கிறவரையில், கவலையேபடாதீங்க, தம்பி" என்று ஆறுதல் கூற முனைந்தார் கோனார்.

கோனாரின் ஆறுதல் மணிக்குச் சிறிது தெம்பு அளித்தது; ஆழ்ந்த பெருமூச்செறிந்தவாறே கண்களை மூடிக்கிடந்தான். சிறிது நேரம் கழித்து மணி கண் விழித்தான். விழித்ததும் கோனாரை நோக்கி, "சங்கர் வந்தானா?"என்றுகேட்டான்.

"அவுக தினம் தினம் வந்து உங்களைப் பார்த்துட்டுத் தானே போறாக. தம்பி, சங்கரய்யாவைச் சும்மா சொல்லக் கூடாது அவுகதான் இந்த சமயத்திலே நமக்கு ஒத்தாசையா இருந்தாக. இன்னிக்கி அவுக தங்கச்சியையும் கூட்டிக்கிட்டு வரனும்னு சொல்லிட்டுப் போனாக" என்று உற்சாகத்தோடு பதிலளித்தார் கோனார்.

கமலாவைப் பற்றிக் கேள்விப்பட்டதும், மணியின் மன வேதனை குறைவது மாதிரித் தோன்றியது.

"அம்மாவையும் பார்க்கணும் போலே இருக்கு"என்று கூறி. அவள் இருக்கக்கூடிய அமங்கலக் கோலத்தைக் கற்பனை பண்ணிப் பார்த்துக் கூசிச் சாம்பினான் மணி. "அப்பாவின் பிரேதத்தைக் கூடச் சரியாகப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை எனக்கு. கொள்ளி வைக்கிறதுக்கு ரெண்டு பிள்ளைகள் இருந்தும், ரெண்டும் உதவாமல் போகணும்கிறதுதான் அப்பாவின் தலையெழுத்து போல் இருக்கு" என்று கம்மியடைந்த குரலில் தேம்பினான்.

"அவுக அவுக தலையெழுத்துப் போல ஆச்சி. அன்னிக்கு எழுதினவன் அழிச்சா எழுதப் போறான்?"என்று தமக்குத் தெரிந்த வேதாந்தத்தைக் கூறி மணியைச் சாந்தி செய்ய முயன்றார் கோனார்.