பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190


தூக்கி விட்டுட்டேண்டா! இனிமே யாரடா எனக்குத் துணை? என்னடா செய்யப் போறேன்....?"

உணர்ச்சிவசப்பட்டுக்குமுறினாள் தங்கம்.

அருகில் நின்ற கோனாரும், சங்கரும் இன்னது செய்வதெனத் தெரியாமல் திகைத்து நின்றார்கள். தாயின் கண்ணீர் பெருகுவதற்கு முன்பே, மணியின் கண்ணீர் தலையணையை நனைக்கத் தொடங்கிவிட்டது. மணி விக்கி விக்கி அழத் தொடங்கி விட்டான்.

நல்லவேளையாக டாக்டர் வந்து சேர்ந்தார்.

வந்ததும் வராததுமாக அவர் தங்கம்மாளைப் பார்த்து, " இதென்னம்மா சத்தம்? உங்கள் பிள்ளை நோயாய்ப் படுத்திருக்கிறார் என்பதுகூடத் தெரியாமல் இப்படி அழுகிறீர்களே, அவருக்கு நீங்கள் ஆறுதல் சொல்லித் தேற்றுவதை விட்டு விட்டு, நீங்களே இப்படி அழுதால்? அப்புறம், உங்கள் - பிள்ளைக்கு எப்படிக் குணமாகும்? மேலும் நீங்கள் அழுவதால் ஆஸ்பத்திரியிலுள்ள மற்ற நோயாளிகளுக்கும் சிரமம் வருத்தம் எல்லோருக்கும் தான் இருக்கிறது. அதை இப்படி அழுது தீர்த்துத்தான் காட்டிக்கொள்ள வேண்டுமா?" என்று கண்டனமும் பணிவும் நிறைந்த வார்த்தைகளைப் பேசி, தங்கம்மாளைச் சமாதானப்படுத்தி அழுகையை நிறுத்தினார்.

பிறகுதான் மணியும் தன் கண்களைத் துடைத்து விட்டு, "அழாதேயம்மா நீயே அழுதால் பிறகு எனக்கு யாரம்மா ஆறுதல்?" என்று கம்மினான்.

"அழனும்ணு விதி இருக்கயிலே அழாமல் இருக்க முடியுமாடா மகனே!" என்று பொங்கிவந்த அழுகையை உள்ளடக்கிக் கொண்டு சொன்னாள் தங்கம்.

மணிக்கு அதற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை திகைத்தான்.