பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192


கமலாவுக்கும் இத்தனை நாட்களுக்குப் பிறகு மணியைத் தனியே சந்திப்பதில் உண்டாகும் மகிழ்ச்சியும், இடம் பொருள் முதலிய சந்தர்ப்பங்களினால் ஏற்படும் இனந்தெரியாத கலவர உணர்ச்சியும் மனத்தில் புகுந்து குறுகுறுத்தன.

"என்ன அத்தான் எப்படியிருக்கு?" என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்தாள் கமலா.

"இப்படி உட்கார்"என்றான் மணி

கமலா அருகில் கிடந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

"பக்கத்திலேவாயேன்."

கமலா நாற்காலியை அருகில் இழுத்துப் போட்டுக் கொண்டாள். மணி அந்தத் தனிமையினால் ஏற்பட்ட குறுகுறுப்பினால், கமலாவின் கரத்தை எடுத்துத் தன் கன்னத்தோடு வைத்துக் கொண்டான்; அவளது சிவந்த கரத்தில் மெல்ல முத்தமிட்டான்.கமலாவுக்கு உடம்பெல்லாம் புல்லரித்துக் கிளுகிளுத்துக் சிலிர்த்தது. அந்த ஸ்பரிச் சுகத்திலிருந்து மீளும் துணிவோ பிரக்ஞையோ அற்றவளாக, அவள் அப்படியே மெய்மறந்து உட்கார்ந் திருந்தாள்.

"இந்த மாதிரிக் கைகளினால் எனக்கு வைத்தியம் செய்வதானால். நான் என் ஆயுள் முழுவதும் இப்படியே கழித்து விடுவேன்!" என்றான் மணி.

"அசடுமாதிரிப் பேசாதிங்க!" என்று செல்லமாகக் கூறியவாறே கையை மெல்ல விடுவித்துக் கொண்டாள் கமலா. "யாராவது வந்திடப் போறாங்க, அப்புறம்...?"

"அப்புறம் என்ன?"

கமலா பதில் கூறாமல் "குறும்பைப் பாரு!" என்று செல்லமாக மணியின் கன்னத்தில் இடித்தாள்.

இருவரும் மெல்லச் சிரித்துக்கொண்டார்கள்.