பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

193


"கமலா, நீ என்னைப் பார்க்க இப்படி வந்திடுறியே, உங்க அப்பா கண்டா விடுவாரா?" என்று ஆவலோடு கேட்டான் மணி.

"அப்பாவுக்கு அம்மா எப்படியாவது பதில் சொல்லிக் கிடுவாள்!"

கமலாவுக்குத் தன் தந்தையை நினைத்ததும், அவர் மணியின் குடும்பத்துக்கு இழைத்த கொடுமை நினைவுக்கு வந்துவிட்டது.

"அத்தான், அப்பாவாலே தானே உங்களுக்கு இந்தக் கதி? அதை நினைச்சி, நீங்க என்னோடு எங்க முகங் கொடுத்துக்கூடப் பேசமாட்டியளோன்னு பயந்துக்கிட் டிருந்தேன்."

மணி ஆழ்ந்தபெருமூச்சு விட்டான். அதுக்கு நீ என்ன செய்வே?"

"அதுக்குத்தான் அப்பாவைப் பழி வாங்கிற மாதிரி, நான் உங்களைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேனே!" என்று வெட்கமும் வேடிக்கையும் கலந்த குரலில் உற்சாகத்தோடு கூறினாள் கமலா,

"அதெப்படி முடியும், கமலா?" என்று கவலையோடு கேட்டான் மணி. "இனிமேல் மட்டும் அவர் சம்மதிப்பாரா? அதிலும் எங்க குடும்பம் இவ்வளவு கேவலப்பட்டு, சந்தி சிரிச்ச பிறகு?"

மணியின் கண்கள் எதையோ பறி கொடுக்கப் போவது போல் கலங்கி மிரண்டன; அவனுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை.

"அப்பா என்ன சொன்னாலும் சரி நம் கல்யாணம் நடந்தே தீரும்!"