பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

195


இருளப்பக் கோனார் தூக்கம் கலைந்து எழுந்து வெளியே சென்று விட்டு வருவதற்காகக் கதவைத் திறந்தார். கதவு திறக்கும் சப்தம் கேட்டு மணி, "யாரது கோனாரா?" என்று கேட்டான்.

"என்ன தம்பி, இன்னுமா தூங்கலே?"

"இல்லே இப்பதான் விழிச்சேன்!"

"தூங்குங்க தம்பி.கண்முழிச்சா உடம்புக்கு ஆகாது"

கோனார் வெளியே சென்றுவிட்டுத் திரும்பி வந்து படுத்ததும் மணிக்குத் தெரியும், எனினும் அவன் மீண்டும் குரல் கொடுத்துத் தன்னைத்தானே காட்டிக் கொடுக்க விரும்பவில்லை. இருளப்பக்கோனாரின் குறட்டைச்சப்தம் சிறிது நேரத்தில் மெதுவாக இழையத் தொடங்கியது. மணி நெடிய பெருமூச்செறிந்தவாறே ஜன்னலுக்கு வெளியே பரவிக் கிடந்த இருட்பிரவாகத்தைப் பார்த்தான்.

அடி வானவட்டத்தில் மின்னல் பளீர் பளீர் என்று ஜோதி வீசிக் கண்ணைப் பறித்தது. வான விளிம்பில் திரண்டிருந்த மேகக் கருமை, மின்னல் ஒளியில், திரை சாய்ந்து படுத்துறங்கும் காட்டானைக் கூட்டம் போல் தோற்றம் அளித்தது. அத்துவானக் காட்டுக்குள்ளிருந்து சோர்ந்து பிளிறும் களிற்றைப் போல் இடி முழக்கம் மெல்ல முனகி ஓய்ந்தது.

மணியின் சிந்தனையில் சங்கரின் நினைவு பளிச்சிட்டது.

ஒருநாள் மாலையில் சங்கர் மணியுடன் அமர்ந்து வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தான். நடந்தது நடந்து விட்டது. இனி நடக்கவேண்டியதை யோசனை செய் என்று ஆறுதல் கூறினான்; என் அப்பா தன் பணத்தைத் தான் கட்டியாள முடியுமே தவிர, என்னையோ கமலாவையோ கட்டியாள முடியாது என்று தைரியம் கூறினான். அதற்குப் பிறகு.