பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196


மணியின் சிந்தனையில் அந்த வார்த்தைகள் தாம் மின்னலைப் போல வெட்டி மினுக்கின.

"மணி, நான் இன்னொன்றும் சொல்ல விரும்புகிறேன். நீ என்னவோ இதுநாள் வரை பொது வாழ்க்கையிலேயே ஈடுபட மறுத்து வந்தாய். நான் ஏதாவது உன்னிடம் பேசமுனைந்தாலும் நட்புரிமைக்காகக் காதுகொடுப்பாயே தவிர, உன் மனம் அதைப் பற்றிக் கவலை கொண்டதில்லை. என்னவோ உன் காரியத்தை மட்டும் நீ ஒழுங்காகப் பார்த்துக்கொண்டு போவது போல் நடந்து கொண்டாய். ஆனால், இன்றாவது நீ யோசித்துப் பார். உன்னைக் கேட்காமலே உலகநிலை உன்னை இக்கோலத்துக்கு ஆளாக்கிவிட்டுவிட்டது. தந்தையை இழந்தாய்; தம்பியைப் பறிகொடுத்தாய், இவையெல்லாம் உன் இஷ்டப்படியா நடந்தன? நாம் என்னென்ன கனவுகள் கண்டாலும், எப்படித்தான் வாழ முயன்றாலும் உலகப் போக்கைப்பற்றி பிரக்ஞை இல்லாதவரை நம் வாழ்க்கை நாம் நினைப்பது போல் நடப்பதில்லை; நம் கனவுகள் நிறைவேறுவதில்லை. இதை நீ இப்போதாவது உணர்கிறாயா?

"இன்று உலகநிலை, நம் நாட்டின் நெருக்கடி உன்னை நேரடியாகப் பாதித்து விட்டது. உன் தந்தையின் கோர மரணம் உனக்கு அதிர்ச்சியைத் தந்தது. ஆனால் இதுபோல் உலகில் தினம் தினம் எத்தனை சம்பவங்கள் நடக்கின்றன தெரியுமா?அவை உன் அனுதாபத்தைக் கூடக் கவரவில்லை. இல்லையா?_

சங்கர் கூறுவதை மணி கவனத்தோடு கேட்டான்; ஆனால் அவனது இதயம் அந்த வார்த்தைகளின் அர்த்த பாவத்தைச் சரிவர வாங்கிக் கொள்ளவில்லை; அவனுக்குச் சங்கர் கூறுவது புரியவில்லை.

"நீ என்ன சொல்ல விரும்புகிறாய்?" என்று குறுக்கிட்டான் மணி.