பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

197


'மணி, இந்தச் சம்பவம் உன் குடும்பத்துக்கு மட்டும் நேர்ந்த கதி என்று எண்ணாதே. தறியை நம்பிப் பிழைத்து வந்த ஜனங்கள் எல்லோருமே இன்று இந்தக் கதிக்குத்தான் ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். நமது ஊரிலேயே ஜனங்களின் நிலைமை என்ன தெரியுமா? அவர்களும் உன் தந்தையைப் போல் தற்கொலை செய்து கொள்ளத் துணியவில்லையென்றால் அவர்களுக்கு வாழ்க்கையின் மீதுள்ள நம்பிக்கை, பற்றுதல் குன்றிவிடவில்லை என்றுதான் அர்த்தம். இங்குமட்டுமல்ல, இமயம் முதல் குமரி வரை இதே நிலைமை.

"இந்த நிலைமையை மாற்றும் பணியில் நீ இனிமேலாவது ஓரளவு பங்கு பெறக் கூடாதா?..."

மணியின் மனத்தில் சங்கரின் இந்த வேண்டுகோள் விடை காண முடியாமல் அலைக்கழித்தது; சங்கரின் ஆறுதல் அவனுக்கு நம்பிக்கையைத்தந்தது. ஆனால் அவன் விளக்கிய உலக நிலையோ மணியின் மனத்தில் தனது எதிர்காலத்தைப்பற்றிய இருள் மண்டலத்தைத் தான் கவியச் செய்தது...

இருளின் அமைதியைக் குலைத்து எங்கிருந்தோ இரவில் ரோந்து சுற்றும் ஒரு போலீஸ்காரனின் விசில் சப்தம் கீச்சிட்டது; தொடர்ந்து ஒரு நாய் பிலாக்கணம் வைத்து ஓலமிடும் அழுகுரல் அந்தகார அமைதியைச் சிலிர்த்து நடுங்க வைத்தது; கடிகாரம் நிர்விசாரமாக இடைவிடாது சப்தித்துக் கொண்டிருந்தது.

மணி தன் தாயைப்பற்றி நினைத்தான்,

இரண்டு தினங்களுக்கு முன் தங்கம்மாள் வந்திருந்தாள். அன்று அவள் மணியிடம் வீட்டு நிலைமைகளைப் பற்றியெல்லாம் பேசிவிட்டுச் சென்றாள்...

"அப்பா மணி, கோனாரும் அவரு பொஞ்சாதியும் தான் எனக்குத் துணை. சொல்லி அழனும்னாக்கூட அவ