பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200


ஏறிட்டுப் பார்க்கவே அவன் மனம் கூசியது. ஏறிட்டுப் பார்க்கா விட்டாலோ, பாரம் தாங்கமுடியாத இருள் மண்டலம் தன் மீது விழுந்து தன்னை அமுக்குவதுபோல் அவனுக்குத் தோன்றியது.

அவன் சிந்தித்தான்; சிந்தித்துச் சிந்தித்துக் குழம்பினான்.

கமலா காதல் மொழி பேசி மயக்குகிறாள்; சங்கர் வசிய பாதையில் கைபிடித்து இழுக்க முயல்கிறான்; அம்மா நடைமுறை உலகைக்காட்டிமிரட்டுகிறாள். நானோ எல்லாவற்றையும் கண்டு நடுங்குகிறேன். அப்படித்தானா?_

என்னை மறக்காதே என்கிறாள் அம்மா; நம்மை மறக்காதீர்கள் என்கிறாள் கமலா; நாட்டை மறக்காதே என்கிறான் சங்கர். நானோ நான் என்னை மறக்கவே வழி தேடுகிறேன் அப்படித்தானா?_

ஏன்? ஏன் இந்த பயம்? ஏன் இந்த அதைரியம்? அவ நம்பிக்கை?_

மணியின் சிந்தனை காரண காரியத் தொடர்போடு பிரச்னைகளின் சம்பந்தா சம்பந்தத்தை ஆராயவில்லை. அவன் பிரச்னைகளைக் கண்டு பயந்தான்; வெகுண்டான்; ஏதோ உலகமே தன்னைப்பார்த்துத் தன் கோரப்பற்களைக் காட்டிப் பயமுறுத்துவதாகக் கருதினான்; திடீரென்று தன் மீது பாறைகளைப்போல் சரிந்துவிழும் பொறுப்புணர்ச்சிகளை தாங்கிக்கொள்ளத் தயங்கினான்; தப்பித்துக் கொள்ள விரும்பினான்.

இருள் மண்டிக்கிடந்த மணியின் மனக்குகையில் திசை தேடித் திரிந்த சிந்தனை ஏதோ ஒரு புதிய ஒளியைக் கண்டு விட்டது போல் துள்ளிக் குதித்தது; அவன் இதயம் சுடிகாரத்தின் பெண்டுல ஓசையோடு போட்டி போட்டுக் கொண்டு, அதன் சப்த கதியையும் மிஞ்சி வேகமாகத் துடித்துப் புடைப்பதுபோல் படபடத்தது; திடீரென்று அவன் தன்மீது கிடந்த போர்வையை எட்டி வீசிவிட்டு,