பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

201


படுக்கையை விட்டு எழுந்தான், அவனது முடிவை ஆட்சேபிப்பது போல், அந்த இரும்புக் கட்டில் கிரீச்சிட்டு முனகியது.

பொழுது புலரத் தொடங்கியது. அருணோதயத்துக்கு வழி பாடி வரவு கூறுவது போல் எங்கோ ஒரு சேவல் குரலெடுத்துக் கூவியது; பக்கத்து வார்டிலிருந்து தூக்கம் கலைந்து எழுந்த ஒரு கைக்குழந்தையின் அழுகுரல்கேட்டது விடிவு காலத்தை உணர்ந்து உலகம் துயில் நீங்கி எழத் தொடங்கியது; காலைக் கதிரவனின் பச்சைப் பசும் இளங்கதிர்கள் ஆஸ்பத்திரிக் கட்டிடத்தினுள் நுழைந்து துழாவின_

இருளப்பக் கோனார் தூக்கம் கலைந்தெழுந்து சோம்பல் முறித்துவிட்டு மணியின் கட்டிலின் பக்கம் திரும்பினார்.

மணியைக் காணவில்லை!

காணவில்லை என்றவுடனேயே அவருக்கு இல்லாத சந்தேகங்களெல்லாம் தோன்றின; நெஞ்சு படபடத்துத் துடித்தது. ஆஸ்பத்திரி எங்கும் தேடினார்; வாசலில் காவல் காத்து நின்ற காவலாளியைக் கேட்டார்; இவருடைய சந்தேகம் ஊர்ஜிதமாக அதிகநேரம் ஆகவில்லை.

மணி போயே போய்விட்டான்!

இருளப்பக் கோனாருக்கு இன்னது நடந்திருக்கும்' என்று ஊகிக்கவும் முடியாமல் சிந்திக்கவும் முடியாமல், மனம் எண்ணாததெல்லாம் எண்ணி அலமலந்தது.கைலாச முதலியார் தொங்கிய ஒருமுழக் கயிறு கண்முன் தோன்றி ஊசலாடியது?. ஆற்றுப் பாலத்துக்கடியில் சுழித்து நுரைத்துக் கொண்டு ஓடும் தாமிரபருணிப் பிரவாகம் திரை விரித்துச் சிரித்தது; பளபளக்கும் தண்டவாளங்களின் மீது ராஜ கம்பீரத்தோடு ஓடிமறையும் ரயில் வண்டி கடகடத்து மறைந்தது.