பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15


தக்கி வளர முயலும் உள்நாட்டுச் சிறு முதலாளிகளின் யந்திரத்தொழில் முயற்சி, ஒரு புறம் அசுரவேகத்தில் பறந்து செல்லும் லாரிகள், பஸ்கள்; இன்னொரு புறத்திலோ, தெற்கு மலையிலுள்ள சொரிமுத்தைய்யன் கோயிலில் பொங்கலிட்டுப் பூசை போடுவதற்காக, மலைக்காட்டுப் பாதையில் ஆமை வேகத்தில் செல்லும் கூண்டு வண்டிகள். ஒரு புறம் யந்திர சாதனமும் மின்சார உற்பத்தியும் நிறைந்த தொழிற்சாலைகள்; மறுபுறத்தில் ஆதீன அடியார்க்கு நல்லார்களின், தரகுப் பிள்ளைமார் என்ற தடியடித் தம்பிரான்களின் நிலப்பிரபுத்துவச் சுரண்டலுக்கு இரையாகிக் கொண்டிருக்கும் பிற்போக்கான விவசாயச் சமூகம். ஒருபுறம் அன்னிய முதலாளித்துவம்; மறுபுறம் உள்நாட்டு நிலப்பிரபுத்துவம்.

நிலப்பிரபுத்துவச் சீரழிவுக்கும், முதலாளித்துவ வளர்ச்சிக்குமான சரித்திர கதியின் பிரசவ காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இன்றைய இந்தியாவின் ஒரு பகுதியான அம்பாசமுத்திரம் தென் பிராந்திய ரயில்வேயில் ஒரு முக்கிய ஸ்டேஷன். ரயில்வே ஸ்டேஷன், ஊர் ஜனங்களின் வசதியை உத்தேசித்துக் கட்டப்பட்டதா, அல்லது ஹார்வி மில்லின் சௌகரியத்தைக் கருதிக் கட்டப்பட்டதா என்ற சந்தேகம் ஸ்டேஷனில் வந்திறங்கும் எவருக்கும் ஏற்படலாம். ஏனெனில் ஸ்டேஷனுக்கும் ஊரின் கேந்திர பாகத்துக்கும் ஒன்றரை மைல் தூரமிருக்கும்; அதே சமயத்தில் ரயில்வே ஸ்டேஷனை அடுத்து, அம்பா சமுத்திரம் விக்கிரமசிங்கபுரம் ரோட்டோரத்தில் ஹார்வி மில்லுக்குச் சொந்தமான கிட்டங்கி இருக்கிறது, ஸ்டேஷனிலிருந்து காலாறக் கிட்டத்தட்ட ஒருமைல் தூரம் நடந்து வந்தால், ஊரும் கடை கண்ணிகளும் கண்ணில் தட்டுப்படும். ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஊரை நோக்கி வரும் பீடர் ரஸ்தாவில் சிறிது தூரம் வந்தபிறகு, இடது புறமாகவும், வலது புறமாகவும் செல்லும் தெருக்கள் முதலிமார் என்றழைக்கப் பெறும் கைநெசவுத் தொழிவாளர்கள் வாழும் பிரதேசத்தைப் புலப்படுத்தும்.