பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208 ☐

பட்டப்பில் அதை எண்ணிப் பார்க்கக்கூட முடிய வில்லை. இப்போதுதான் அதை எண்ணிப் பார்த்தான். நோட்டும் சில்லறையுமாக ரூபாய் முப்பத்தியேழு சொச்சம் இருந்தது.

"இந்தப் பணம் ஏது? கோனார் பணமா? கோனாரிடம் ஏது இவ்வளவு? எதற்காகவைத்திருந்தார். என் செலவுக்கா, வீட்டுச் செலவுக்கா? யாரிடமேனும் கடன் வாங்கினாரா? அல்லது சங்கர் கொடுத்திருப்பானா...?"

மணி அதைப்பற்றி அதிக நேரம் சிந்திக்கவில்லை; அதனால் பிறருக்கு ஏற்படும் சிரமத்தைப் பற்றியும் அவன் சிந்திக்கவில்லை. அந்தக் கணத்தில் அவன் மனத்தில் சுயநலம்தான் மேலோங்கி நின்றது. எனவே அவன் வேறொன்றும் நினையாமல் நேரே ஹோட்டலுக்குள் சென்றான். ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, அவன் அடுத்தாற்போல் எங்கு செல்வது என்றும் சிந்தித்தான். அவனுக்கு எதுவும் புலப்படவில்லை. கடைசியாக வன்ணார் பேட்டையிலுள்ள தன் கல்லூரி நண்பன் ஒருவன் அறையில் சென்று தங்குவது, பிறகு யோசிப்பது என்று தீர்மானித்தவனாகச் சாப்பிட்டு முடித்தான்.

சாப்பிட்டு முடித்துவிட்டு இலையைத் தொட்டியில் போடுவதற்காகச் சென்றான் மணி,

"சாமி, சாமி தொட்டியிலே போடாதே சாமி, இப்படிப் போடு!" என்ற குரல் கேட்டு, மணி திடுக்கிட்டு நின்றான்; ஹோட்டலின் எச்சில் இலை போடும் தொட்டிக்கு அப்பால், இரண்டு கைகளையும் ஏந்திக் கொண்டு ஒரு பிச்சைக்காரன் ஆவலோடு நின்று கொண்டிருந்தான்; இலை அவன் கையில் விழாமல், தவறித் தன் முன்னால் விழாதா என்று ஏங்கிக் கொண்டிருப்பது போல் அவனுக்கு அருகில் ஒரு வங்கு பற்றிய சொறி நாய் நின்று கொண்டிருந்தது.