பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210


அறையிலேயே தங்கினால், தன் நண்பன் எங்கே சந்தேகப்பட்டுவிடுவானோ என்று சிறிது நேரத்தில் வெளிக்கிளம்பிச் சென்றான் மணி நல்லவேளையாகத் தன் குடும்பத்தின் கதையெல்லாம் அந்த நண்பனின் காதுவரை எட்டாதிருக்கிறதே என்று மணி திருப்திப்பட்டுக் கொண்டான். அன்று பகல் முழுவதும் மணி இன்னது செய்வதெனத் தெரியாமல், யார் கண்ணிலும் பட்டுவிடக்கூடாது என்ற பயத்தில், முனிஸிபல் பார்க்கில் போய் அமர்ந்து பொழுதைக் கழித்தான்.

நிர்மானுஷ்யமான முனிஸிபல பார்க்கின் புல்வெளியில் படுத்தவாறே மணி தன் நிலைமையைச் சிந்தித்துப் பார்த்தான்.

"இனி என்ன செய்வது?"

கீறல் விழுந்த இசைத் தட்டைப்போல் இதே கேள்வி மீண்டும் மீண்டும் ஒலியெழுப்பிக் சரகரத்தது. அவன் மனத்தில் திட்டவட்டமான சிந்தனைகள் எதுவும் உருவாகவில்லை. எதிர்காலம் திக்குத் திசாந்திரம் தெரியாத இருள் மண்டலமாய் அவனுக்குத் தோன்றியது.

"என்ன செய்வது?"

அதைப்பற்றி யோசித்து யோசித்து அலுத்துக் கொள்ளும்வேளையில்,அவனுக்குப்பாளையங்கோட்டை ஹோட்டலில் கண்ட அந்த ஏழைப்பிச்சைக்காரனின் வற்றி மெலிந்த முகம் தான் காட்சியளித்தது...

அவன் ஏன் இந்த கதிக்கு ஆளானான்? பசியின் கொடுடமை மனிதனை இவ்வளவு கேவலத்துக்கா ஆளாக்கி விடுகிறது. ஒரு சாண் வயிற்றுக்காக, மானாபிமானம் இன்றி, கூச்சமின்றி, அருவருப்பின்றி, மனிதன் எச்சில் இலைக்கா நாயோடு போட்டி போட வேண்டும்? மனித உயிர் அவ்வளவு பெரிதா? அந்த உயிரை அப்படிப் பேணி வளர்க்காவிட்டால் என்ன.?"