பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214


இதற்குள் இன்னொரு குரல் குறுக்கே விழுந்து வெட்டிப் பேசியது.

"என்னப்பா நீங்கள்? புரியாத விஷயத்திலே ஏன் இப்படிப் போட்டு மண்டையை உடைச்சிக்கிடுதீங்க.? பாளையங்கோட்டையிலே'பாலித் தீவின் கன்னிகள்'னு ஒரு படம் நடக்குதாம்.எல்லாத்தையும் அப்படி அப்படியே காட்டுதானாம்... வாங்கப்பா, போயிட்டு வரலாம்!"

தொடர்ந்து எல்லோரும் கலீர் என்று சிரித்துக் குலுங்குவது கேட்டது.

மணி அவர்கள் பேச்சை மேலும் கேட்டுக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் தன்னைப் பற்றிப் பேசவில்லை என்றவுடனேயே அவர்கள் பேச்சைக் கேட்பதில் அவன் அக்கறை கொள்ளவில்லை. அத்துடன் அவனுக்குக் கடந்த நாள் தூக்கமில்லாமையால் தூக்கக் கிறக்கம் கண்ணில் கனமேற்றி உறுத்தியது, காய்ந்து சுருங்கும் கனியைப்போல் அவன் கண்கள் தவிர்க்க முடியாத தூக்கவுணர்ச்சியால் கிட்டித்து இறுகின எனினும் அவன் மனம் மட்டும் சிந்தனை செய்வதை நிறுத்தவில்லை. நினைவு மயங்கும் அந்த நிலையிலும் அவன் மனம் என்னென்னவோ எண்ணிக் குமைந்து கொண்டிருந்தது....

"அவன் சொன்ன மாதிரி, இவர்கள் ஏன் இந்தப் புரியாத விஷயங்களைப் பற்றி பேசி மூச்சைத் தொலைக்கிறார்கள்? இவர்களுக்கு வேறு வேலையில்லையா? உலகத்தைப் பற்றி இவர்களுக்கு என்ன கவலை? இவர்கள் தான் உலகத்தை மாற்றியமைக்கப்போகிறார்களா இந்த அரசியலும் ஆராய்ச்சியும் எதற்கு?...

"உலகத்தைப் பற்றிக் கவலை கொள்ள இவர்களுக்கு என்ன ஆத்திரம் வந்தது. உலகத்து மக்களின் வாழ்க்கையில் இவர்களுக்கு ஏன் இத்தனை சிரத்தை அவர்கள் வாழ்ந்தால் தான் இவர்களும் வாழ முடியும் என்ற நினைப்பா? தங்கள் க்ஷேமலாபங்களும் உலகத்தின் க்ஷேமலாபங்களும்