பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

215


ஒன்றுதான் என்ற எண்ணமா? அல்லது உலக நலத்தில்தான் இவர்கள் தங்கள் நலத்தைக் காண்கிறார்களா....?"

"ஏன் அப்படி? இவர்கள் தமது வாழ்க்கையை உலக வாழ்க்கையோடு ஒட்டவைத்துப்பார்க்கிறார்களா? அப்படியானால், நான் என் வாழ்க்கையை உலக வாழ்க்கையோடு ஒட்டவிடாமல், எட்ட வைத்துப் பார்க்கிறேனா? எது சரி, எதனால் நன்மையுண்டு...?”.

சொப்பனலய சுகம் போன்ற அந்த மங்கிய சிந்தனைக்கிறக்கத்தில் மணி என்னென்னவோ எண்ணிப் பார்த்தாள்; எனினும் அந்தச் சமயத்தில் அவன் மனத்தின் எந்த மூலையிலும் அன்று சங்கர் சொன்ன வார்த்தைகள் சிறிதும் எதிரொலிக்கவில்லை. கவிந்து ஆட்கொள்ளும் நித்திரையையும் திமிறிக்கொண்டு அவன் உள்ளம் அவனது எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தனை செய்தது...

"இனி நான் என்ன செய்வது? எப்படி வாழ்நாளை ஓட்டுவது? கையிலுள்ள பணம் எத்தனை நாளைக்குக் கட்டி வரும்.? அதற்குப்பின்? எங்காவது வேலை தேடித் தான் பிழைக்க வேண்டுமா? வேலை கிடைக்காவிட்டால்.? ஒரு சின்ன கிளார்க் உத்தியோகத்துக்குமா பஞ்சம்...? அதுவும் கிடைக்காவிட்டால்....?அப்புறம்?"

அவன் மனக் கண் முன்னால், பாளையங்கோட்டையில் கண்ட அந்தப் பிச்சைக்காரனின் பரிதாபக் கோலம் தென்பட்டது...

"சேக்சே." அந்த மாதிரிக் கதிக்கு ஆளாவதைவிட, என் அப்பாவை மாதிரிதானும் தற்கொலை செய்துகொண்டு விட்டலாம். அப்படிச் செய்துவிட்டால், ஒரு கவலையில்லை. எள் எதிர்காலம் என்னை என்றும் பயமுறுத்த முடியாது..."

அவன் மனம் திடீரென்று தற்கொலையைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியது...