□ 223
மூச்சு விடைபெறும் வரை, நல்வாழ்வு வாழத் துடிப்பதும், அதற்காகப் போராடுவதும் தான் சிறந்த லட்சியம், மனித லட்சியம்!.
சங்கரின் மனத்தில் மீண்டும் அந்தப் படக்காட்சி திரை விரித்தது.
சோவியத் சேனை பெர்லின் நகருக்குள்ளே பிரவேசித்து விட்டது.ரீச்ஸ்டாக் மாளிகையிலே சோவியத் செங்கொடியைப் பறக்க விடுவதற்காக, மூன்று போர் வீரர்கள் முன்னேறிச் செல்கிறார்கள், இடிபாடுகளுக் கிடையே, செங்கொடியைப் புனித உணர்வோடும் புளகாங்கிதத்தோடும் சுமந்து கொண்டு முன்னேறுகிறார்கள். கண்மூடித்தனமாகப் பாய்ந்து வரும் துப்பாக்கிக் குண்டுகளையும், நாஜிகளின் அந்திமதசைத்தாக்குதலையும் சமாளித்துமாளிகைப்படிகளில் ஏறுகிறார்கள். திடீரென்று ஒரு துப்பாக்கிக் குண்டு, அந்த வீரர்களில் ஒருவனைக் கீழே சாய்த்து விட்டது; எனினும் செங்கொடி சாயவில்லை. மரணத் தறுவாயிலுள்ள அந்த செஞ்சேனை வீரன் ரத்தம் தோய்ந்து கசியும் தனது கைக்குட்டையை எடுத்து, தன் தோழனிடம் கொடுத்து, 'இதோ இந்தக் கொடியையும் ஏற்றுங்கள்' என்று கூறியவாறே உயிர் துறக்கிறான். ரீச்ஸ்டாக்கில் பட்டொளி வீசிப் பறக்கும் செங்கொடியின் நிழலிலே, அந்த வீரன் கொடுத்த ரத்தப் பதாகையும் பறக்கிறது!'
சங்கர் அந்த சோவியத் வீரனின் தியாகத்தை நினைத்து நினைத்து வியந்தான்.
"ஆம் அவன் கடைசி மூச்சுவரை தன் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகப் போராடினான். அதுதான் அவன் லட்சியம்! யுத்தம் ஒழிந்து, சமாதானம் நிலவி, மீண்டும் புதுவாழ்வு மலரப்போகும் சந்தர்ப்பம் கையெட்டும் தூரத்தில் வந்து விட்டது என்று தெரிந்த அந்த நிமிஷத்திலும், அவன் மகிழ்ச்சியோடு உயிர் விடுகிறான்! அது அல்லவா வீரம்?"