பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17


கூறிக்கொண்டே நாயைத் தட்டிக் கொடுத்தார். நாயும் எதையோ புரிந்து கொண்டது போல், தலையை ஆட்டிவிட்டு மீண்டும் தன்னிடத்தில் போய்ப் படுத்துக் கொண்டது.

மைனர் முதலியாரைத் தொடர்ந்து சுப்பையா முதலியாரும் உள்கட்டுக்குச் சென்று கூடத்திலிருந்த கருங்கல்திண்ணைமீது உட்கார்ந்தார்.

மைனர் முதலியார்வாளின் மிடுக்கு பெயருக்குத் தக்கவாறு படாடோபமாகத்தான் இருந்தது. எனினும் இளமையில் இரவு பகல் என்று பாராமல் வண்டி போட்டுக் கொண்டு வைப்பாட்டிமார்களின் வீடுகளுக்குச் சென்று விளையாடி விட்டு வந்ததால், உடம்பில் தாது விழுந்து போய், கனமாய் தோன்றிய போதிலும் எடுப்பும் மினுமினுப்பும் இல்லாதிருந்தது. எனினும் கையிலே டாலடிக்கும் வெள்ளைக்கல் மோதிரங்கள்; நெற்றியிலே அளவெடுத்து வட்டமிட்டது போல் விளங்கும் அழகிய சந்தனப் பொட்டு, வழுக்கை விழுந்த தலையேயாயினும் மிஞ்சி நின்ற ஓரிரு ரோமங்களையும் வாளிப்பாக வாரி விடப்பட்ட கிராப், கழுத்திலே கிடந்து ஒளி சிதறும் நவரத்னக்கற்கள் கோத்தமெல்லிய சங்கிலி, வெற்றிலையும் புகையிலையும் கலந்து லக்ஷ்மிகரமாய் விளங்கும் திருவாய் முதலிய சம்பிரமங்கள் மைனர்வாளின் தளர்ந்து போன உடற்கோலத்துக்குக்காயகல்பம் செய்து ஈடுகட்டமுயன்று கொண்டிருந்தன. மைனர் முதலியார் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டே எதிரே கிடந்த ஆசனத்தில் அமர்ந்தார்.

மைனர் முதலியார்வாளின் - குடும்பம் பல தலைமுறைகளாக வியாபாரத்திலும், லேவாதேவியிலும் ஈடுபட்டு ஏராளமான நிலபுலன்களையும் சொத்துச் சுகங்களையும் தேடிவைத்திருந்தது.மைனரின் தந்தை தமது ஆயுட்காலம் முழுவதையும் அநேகமாகக் கோர்ட்டு வாசலிலேயே கழித்து விட்டார். 'கோடேறியவன் வீடு ஈடேறாது' என்ற நாட்டுப் பழமொழிக்கு எதிர்மறை