பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

225


"யாரது?"

"நான்தான் சங்கர்."

"சங்கரையாவா?வாங்கய்யா, கட்டில்லெ உட்காருங்க என்று கூறியவாறே மாரி எழுந்து வந்து சுவரோடு சாத்தி வைத்திருந்த கட்டிலை எடுத்துப் போட்டாள்.

சங்கர் கட்டிலில் உட்கார்ந்தவாறே, 'கோனார் வீட்டிலே இல்லையா?" என்று கேட்டான்.

"அவஹ சந்தைக்குப்போனாக நேரமும் ஆச்சி. இப்ப வந்திடுவாக" என்று சொன்னாள் மாரி.

இதற்குள் குடிசைக்குள்ளிருந்து ஒருவெள்ளிய உருவம் வெளிவந்தது.

"சங்கரா?வாப்பாவா.உன்னை என்னரெண்டு நாளா இந்தப்பக்கம்காணம்?" என்று கேட்டுக்கொண்டே அருகில் வந்தாள் தங்கம்.

"திருநெல்வேலிக்குப் போயிருந்தேன், அத்தை. அது தான் வரலே."

"ஏதாவது தகவல் கிடைச்சிதா?"

சங்கர் பேசாதிருந்தான், தங்கம் அந்த மௌனத்தைப் புரிந்து கொண்டவளாக ஆழ்ந்த நெடுமூச்செறிந்தாள்.

தங்கம் சென்ற இரண்டு மாத காலத்துக்குள் மிகவும் உருமாறிப் போயிருந்தாள். தள தள வென்றிருந்த அவள் உடல் மினுமினுப்பு இழந்து, வாடிக் கறுத்து, வதங்கிப் போய்விட்டது; முகமும் உடம்பும் வற்றி மெலிந்து விகாரமாயிருந்தன; அத்துடன் அவள் உடுத்தியிருந்த வெள்ளைச் சேலையும், சிக்குப்பிடித்த தலைமயிரும், தாலிச்சரடு இழந்த அமங்கலக் கழுத்தும் அந்த விகாரத் தன்மையை மிகைப் படுத்திக் காட்டின, அவள் சொல்லில் உயிரும் உணர்வும் அற்று, குரல் கரகரத்து உடைந்து போயிருந்தது.