பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226


குடும்பத்தில் எதிர்பாராது நேர்ந்த சோக நிகழ்ச்சிகள் அவளைப் பெரிதும்பாதித்துவிட்டன.திடீரென்று ஒற்றைத் தனிமரமான அவள் வாழ்வில், மணி ஓடிப்போன சம்பவம், கணவனின் மரணத்தையும் ஆறுமுகத்தின் மரணத்தையும் விட, அதிகப்படியான வருத்தத்தையும் கவலையையும் தருவதாக அமைந்து விட்டது. 'அவன் ஒருத்தன்தான் ஆறுதல் என்றிருந்தேன். அவனும் இந்தக் காரியம் செஞ்சுப்புட்டானே!' என்று அவள் அங்கலாய்க்காத நாள் கிடையாது. மணி உயிரோடாவது . இருக்கிறானா, இல்லை என்று அறிய முடியாது, அவள் மனம் தினம் தினம் என்னென்னவோ எண்ணிக் குமைந்தது.

மணி காணாமற் போன ஒரு வார காலத்துக்குள்ளேயே, கைலாச முதலியார் தம் குடும்பத்திற்கு விட்டுச் சென்றிருந்த கடன்களையும் வில்லங்கங்களையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு தங்கத்தின் மீது சார்ந்து விட்டது. மிஞ்சியிருந்த ஜவுளிகளையும், நகை நட்டுகளையும் விற்று, கடன்காரர்களுக்கு ஒன்றும் அரையுமாகக் கொடுத்துத் தீர்த்தாள். வீட்டை மட்டுமேனும் கை நழுவ விடாது காப்பாற்ற வேண்டும் என்றுதான் அவள் கவலைப் பட்டாள். எனினும் மைனர் முதலியாரோ தமது வஞ்சத்தைக் கைலாச முதலியாரோடு நிறுத்திக் கொள்ளவில்லை: மேலும் ஓடிப்போன மணி திரும்ப வந்து விட்டால், வீடு பிதிரார்ஜித சொத்தானதால் நிலைமை எப்படியெப் படியோ என்று எண்ணியவராக, அவரும் தமது பாக்கிக்காகக் கிட்டி போட்டு நெருக்காத குறையாய்,தங்கம்மாளை விரட்டி வந்தார். எனவே தங்கத்துக்கு வீட்டை அவரிடம் விட்டுவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை வீட்டை விட்டு வெளியேறிய அன்று, இருளப்ப கோனாரும் மாரியும் அவளருகில் இல்லாது போயிருந்தால், அவளும் தன் கதையை எங்காவது ஆற்றிலோ, குளத்திலோ முடித் திருப்பாள். இருளப்பக் கோனார்தான் தங்கத்தை அழாக்குறையாகவேண்டி, தமது குடிசையில்வந்து தங்கச்சொன்னார்.