பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232


கண்டு, அவர் உள்ளம் புளகித்தது; அவரையும் அறியாமல் அவர் உள்ளம் அந்த விவசாயிகளோடு சகோதரத்துவம் கொண்டாடியது. 'இப்படிப்பட்ட வீரர்களின் ஆணையை எந்தச் சர்க்கார்தான் புறக்கணிக்க முடியும்?' என்ற ஒரு தைரியம். அவருக்கு ஏற்பட்டது.

மகாநாட்டிலிருந்து திரும்பி‌ ஊர் வந்ததிலிருந்து அவர் மேலும் உற்சாகமும் ஊக்கமும் பெற்றவராக விளங்கினார். அந்தவிவசாயிகள் மகாநாட்டைப் போல் ஒருநெசவாளிகள் மகா நாட்டைக் கூட்டவேண்டுமென்றும் அல்லது குறைந்த பட்சம் ஒரு பெரிய அரசியல் தலைவரையேனும் வரவழைத்துப் பிரசங்கம் செய்ய வைக்கவேண்டுமென்றும் அவர் நேரம் கிடைத்தவேளையெல்லாம் சங்கரைநச்சரித்து வந்தார். நெசவாளிகளிடம் பேசும்போதெல்லாம், "நான் போயிருந்தேனே, அந்தமகாநாட்டிலே." என்று நித்தம் ஒரு முறையேனும் சொல்ல அவர் மறக்க மாட்டார்.

அன்று மாலை அவர்கள் முந்திய நாள் இரவில் அம்பாசமுத்திரத்தில் பிரசங்கம் செய்த ஒரு தேசபக்தரின் பேச்சைப் பற்றித் தங்கள் அபிப்பிராயத்தைப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.

"அவரு பேச்சைக் கொண்டு உடைப்பிலே போடுங்க. என்னமோ நாட்டிலே பாலும் தேனும் வெள்ளமா ஓடுற மாதிரிதான் பேசுதாங்க. இவங்க இல்லேன்னா, இந்த நாடே குட்டிச்சுவராப் போயிடும் போலேதான்! இப்ப மட்டும். என்ன வாழுதாம்? நம்மையெல்லாம் பைத்தியக்காரப் பயல்கன்னு நினைச்சிக்கிட்டாங்களா?" என்று ஆத்திரப் பட்டுக் குமைந்தது ஒரு குரல்.

"பின்னே என்ன, மாப்பிளே! தெய்வ பக்தி குறைஞ்சதினாலேதான் ஊரிலேபஞ்சம் அப்படிங்கிறானே. நமக்கெல்லாம் தெய்வ பக்தி குறைஞ்சா போச்சி? இவங்க தான் தெய்வத்துக்குக்கூட அஞ்சாமல், பொய்யும் புளுகும் அள்ளி விடுதாங்க. தெய்வம் நின்னு கேக்கும்; கேக்காமப் போவாது!" என்று பேசினார் ஒரு முதியவர்