பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18


இலக்கணமாகத்தான் அவரது கோர்ட்டு வாழ்க்கை கழிந்தது. அதாவது அவர் கோர்ட்டுக்குச் சென்று கைமுதல் எதையும் இழக்கவில்லை. அதற்குப் பதிலாகக் குடியானவர்களிடமும் ஏழை எளியவர்களிடமும் கண்ட கண்ட வட்டிக்கும் பணத்துக்கும் நோட்டும் அடமானமும் எழுதி வாங்கி வாங்கி அவர்களிடமுள்ள சொத்துக்களைச் சட்டத்தின் பேரால் அபகரிக்கும் திருப்பணிக்காகவே அவர் கோர்ட் வாசலுக்கு மாதாமாதம் சென்று வந்தார். மைனர் முதலியார் சுயாதீனத்துக்கு அந்தச் சொத்துக்கள் வந்தபோது கண்மூக்குத் தெரியாமல் டம்பாச்சாரி வாழ்க்கைவாழ்வதற்கும் விளையாடுவதற்கும் நிறைந்தவசதி இருந்தது. எனினும் மைனர் முதலியார் அந்த வாழ்க்கை யிலேயே ஒரேயடியாய் முங்கி முழுகி நொடித்துப் போய்விடவில்லை. முப்பத்தைந்து வயதுக்குள்ளாகவே அந்த வாழ்க்கை இரும்புப் பெட்டியை மட்டும் பிடிக்காமல், உடம்பையும் பிடிக்கத் தொடங்கிவிட்டதால், மைனர் முதலியார் உயிராசையின் காரணமாக, சீக்கிரமே ஏலாப் பதிவிரதா இச்சா பத்திய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார். அதன் பின்னர் அவரும் மற்றவர்களைப் போலவே வியாபாரத்தைக் கவனிக்கவும், நூல் ஜவுளிக் கொள்முதல் செய்யவும், வீடு தேடி வந்து விடாப்பிடியாகக் கடன் கேட்கும் சுயஜாதிக்காரரிடத்திலும் பிறரிடமும் ஒன்றரை வட்டி இரண்டு வட்டிக்குச் சொத்தின் பேரிலும் நகை நட்டுக்களின் பேரிலும் கடன் கொடுக்கவும் தொடங்கி, தம் தந்தையின் பிதுர்க்கைங்கரியத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தார். அவரது சமூகத்தினரிடையே பலரும் அவரிடம் கடன் பட்டவர்களாதலால், அவர் தமது பொருளாதாரப் பிடிப்பின் மூலம் அந்த மக்களின் தெய்வ பக்தியிலிருந்து சகல சுப அசுப காரியங்களிலும் ஏகபோக ஆட்சி செலுத்தி வந்தார், எனவே அவர் அம்மன் கோயில் தர்மகர்த்தாவாக இருந்து, ஏதேதோ காரியங்கள் செய்தும் ஊர்க்காரர்கள் அவரைத் தட்டிக் கேட்கப் பயந்து விட்டு விதி என்றிருந்தார்கள்.