பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

241


அழுகையைச் சிரமப்பட்டு உள்ளடக்கியவாறே அங்கிருந்து எழுந்து சென்றாள்; அவள் எழுந்திருந்து செல்வதைச் சங்கர் தடுக்க விரும்பவில்லை.

அவள் சென்று மறையும் வரையிலும் அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்; அவள் நிலைக்காக அவன் உள்ளம் இரங்கியது.

"ஆம். எத்தனை நாளைக்குத் தான் கமலா இப்படியே உருக்குலைந்து கொண்டிருப்பது? புரையோடிப் போன புண்ணை மூடி மூடி வைப்பதை விட, அதைக் கீறியாற்றுவது தான் நல்லது. கீறும் போது வேதனை இருக்கத்தான் செய்யும். அதைப் பொருட்படுத்தலாமா?..."

அந்த விஷயத்தைக் கமலாவிடம் சொல்லிலிட்டதை எண்ணி, அவன் மனம் ஏதோ பாரத்தை இறக்கி வைத்தது போன்ற நிம்மதியையும், நிவர்த்தியுணர்வையும் பெற்றது.


21

துரை மாநகரில்_

நகர வாழ்க்கையின் நாடித் துடிப்பு ஜன்னி வேகத்தில் படபடக்கும் மாலை வேளை; எங்கும் அவசரம்! பரபரப்பு! ஹோட்டல்களில், பஸ்ஸ்டாண்டில், சினிமாக் கொட்டகைகளில், நடை பாதைகளில், கடை. கண்ணிகளில் - எங்கும் மக்கள் சுறுசுறுப்போடு இயங்கிக் கொண்டிருந்தார்கள்; கார்கள், வண்டிகள், சைக்கிள்கள், ரிக்ஷாக்கள் முதலிய வாகனங்கள் பெரும் இரைச்சலை உண்டாக்கிக் கொண்டு மேலும் கீழும் மின்னலைப் போல பாய்ந்து மறைந்து கொண்டிருந்தன.

அவன் எவ்வித அவசரமும் பரபரப்புமற்று டவுன் ஹால் ரோட்டில் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தான்.