பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242



புழுதியும் அழுக்கும் படிந்து கறுத்துப்போன முகம், முகத்தின் செம்பாதியை மூடி மறைத்து, தளிர்த்து வளர்ந்திருக்கும் இளந்தாடி, மீசை; உலைத்தெறிந்த குருவிக் கூடு போல் சிலிர்த்து மதர்த்து நிற்கும் சிக்குப் பிடித்த தலைமயிர்; மஞ்சள் பூத்துப் பாசி பற்றிய பற்கள்; வாடி புலர்ந்து பாளம் கண்டு வெடித்துப் போன உதடுகள்; சவக்களை தட்டியது போல் பஞ்சடைந்து எய்த்துப் போன கண்கள் கண்ணுக்குள் ஆழம் புலப்படாத ஒரு ஏக்க பாவம்; அறுந்து தொங்கும் அவயவம் போல் கிழிந்து ஊசலாடும் மேல் சட்டை; கரைப் புரத்தில் கால்பட்டு வாய் பிளந்து பிதிர்ந்த வேட்டி - இத்தியாதி கோலத்தோடு அவன் அங்கு நிர்விசாரமாக, போவோர் வருவோர் பற்றிய பிரக்ஞையே யற்ற, அர்த்தமற்று வெறித்து நோக்கும் கண்களோடு நின்று கொண்டிருந்தான்.

குடலைப் பிசைந்து கருக்கும் கும்பிக் கொதிப்பின் ஜ்வாலை அவன் முகத்தில் அனல் வீசியது; அந்த ஜ்வாலையின் உஷ்ண வேகம் அவனது உணர்ச்சிகளை சிந்தனைகளை, நம்பிக்கைகளை எல்லாம் சுட்டும் பொசுக்கிச் சூரணமாக்கிக் கொண்டிருந்தது. இடையிடையே உலர்ந்து வாடி மேலண்ணத்தோடு ஒட்டிக் கொள்ளும் நாக்கைச் சப்புக் கொட்டித் தொண்டையை நனைக்க முயன்றான்; எனினும் உமிழ்நீர் பற்றிச் சுவறிய அந்தத் தொண்டையில் பசி நாக்கின் கைப்புத்தான் வழுக்கி இரங்கியது. கண்ணும் காதும் அடைத்தது; இருண்டு வரும் பசி மயக்கம் அவனது புலனுணர்வையும் அறிவையும் கொஞ்சங் கொஞ்சமாக விழுங்குவது போலிருந்தது.

அவன் தன்னைத்தானே மறந்தவனாய் நின்று கொண்டிருந்தான்.

திடீரென்று ரோட்டில் செல்லும் வாகனாதிகளின் இரைச்சலையும், கடை. கண்ணிகளின் ஓசைக் குழப்பத்தையும் மிஞ்சி, பொங்கிவரும் அலை முழக்கம் போன்ற