பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19


ஈஸிச்சேரில் சாய்ந்தவாறே பக்கத்திலிருந்த எச்சில் படிகத்தில் காறித் துப்பிவிட்டு, நிமிர்ந் மைனர் முதலியார், "என்ன சுப்பையா, எங்கே? காலம் காத்தாலே" என்று கேட்டார்.

சுப்பையா தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசினார்.

“நேத்து ராத்திரியே வந்தேன் அண்ணாச்சி, உங்களைக் காணம். அதுதான் காலையிலேயே வந்துட்டுப் போயிறலாம்னுவந்தேன்."

"சரி, என்ன விசயம்?"

"எல்லாம் நம்மவங்க விசயம்தான். நம்ம வடிவேலு முதலியாரும் ரெண்டொருத்தரும் சேந்துக்கிட்டு என்னமோ தறிக்கூலியை உசத்திக் கேக்கணும்னு பேசிக்கிடுதாக.நேத்து நானே கேட்டேன்" என்று தொடங்கினார் சுப்பையா,

"இவனுகளுக்கு என்ன பைத்தியம் கியித்தியம் புடிக்கிருக்கா? காலம் கிடக்கிற கிடையிலே கூலியை உசத்துறதாவது? கட்டுபடியாக வேண்டாமா?" என்று செல்லச் சிரிப்புடன் பதிலளித்தார் மைனர்.

"சொன்னாக் கேக்காங்களா, அண்ணாச்சி, பாருங்க, அந்தவடிவேலு இத்தனையையும் அந்தக் கைலாசமுதலியார் தைரியத்திலேதான் பேசுறாரு. கைலாச முதலியார் கிட்டே கலத்துக்கிட்டு ஊர்க்கூட்டம் போடப் போறதாகச் சொன்னாரு."

"என்னது? கைலாச முதலியாரா? அவர் மின்னேயும் ஒருதரம் இப்படித்தான் பெரிய தாராளப் பிரபு மாதிரிக் கூலியை உசத்திக் குடுக்கணும்னு, இவனுகளோட சேர்ந்துக் கிட்டுத் தாளம் போட்டாரு. இதிலே அவருக்கென்ன லாபமோ தெரியலே?" என்று சலித்தாற்போல் சொன்னார் மைனர்.