பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246


திடீரென்று அவன் தொண்டை கட்டுடைந்து கும்பிக் கொதிப்பின் அக்கினி ஜ்வாலையோடு கொதித்து எழுந்தது; அவனும் அந்தக் கோஷத்தை வாய்விட்டு முழங்கிக் கொண்டே ஊர்வலத்தோடு சங்கமமானான்.

"வேலைகொடு அல்லதுசோறுகொடு"

கூடல்மாநகரை வளைத்து வேலி கட்டிய பண்டைய பௌராணிக ஆலவாய்க் கால சர்ப்பம்போல், அந்த ஊர்வலம் நகரின் பிரதான வீதிகளையெல்லாம் சுற்றி வந்து மதுரை நெசவுத் தொழிலாளர் சங்கக் காரியாலயத்தின் முன்னர் வந்து முடிவடைந்தது. ஊர்வலம் அந்த இடத்தில் வந்து முடிந்து அணி பெயர ஆரம்பித்தது. . கோஷ முழக்கங்கள் முடிவுற்ற பிறகு, அவனிடம் குடிகொண்டிருந்த ஆவேச உணர்ச்சி திடீரென்று குடியோடிப் போனது போலிருந்தது; மறுகணமே அத்தனை நேரமும் பம்மிப் பதுங்கிக் கிடந்த களைப்பும் பசியும் அவனை ஆட்கொண்டு அலைக்கழித்தன. அவன் கண்கள் இருண்டு மங்கின; கால்கள் குழலாடித் தளர்த்தன; பற்கள் நெரிந்தன, அறிவு மங்கிக் கழன்றோடுவது போலிருந்தது...

அவன் திடீரென்று சாய்ந்துவிட்டான்!

"ஐயையோ! யாரோ மயக்கம் போட்டு விழுந்துட்டாரு" என்ற கூக்குரல் அவனுக்குப் பின் புறமிருந்து கிளம்பியது.

மறுகணமே அவனைச் சுற்றிலும் ஒரு பெருங்கூட்டம் கூடி விட்டது. இரண்டு ஊழியர்கள் கூட்டத்தைப் பிளந்து கொண்டு, அவனருகே வந்து அவனைத் தூக்கித் தம்மீது சாய்த்துக் கொண்டார்கள்.

"காத்து வர்ரதுக்கு இடம் கொடுங்கய்யா!"

"ஓடிப்போய் தண்ணி கொண்டாங்க!"

"உசுருக்கு ஆபத்தில்லையே!"