பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250


அந்தக் காரியாலயத்தில் மணியைத் தவிர வேறு யாருமில்லை; காரியாலயத்துக்கு வெளியேயுள்ள வெட்ட வெளியில் மட்டும் இரண்டு ஊழியர்கள் மூங்கில் தட்டிகளில் போஸ்டர்கள் ஒட்டிக்கொண்டிருந்தார்கள்.

மணியின் உடம்பு பலவீனத்தாலும் களைப்பாலும் அலுத்துப் போயிருந்தும் கூட, அவன் மனம் அன்றைய நிகழ்ச்சிகளால் ஏற்பட்ட உள்ளச் சிலிர்ப்போடு அவனைத் தூங்க விடாமல் அலைக்கழித்தது. மணி புரண்டு படுத்தவாறே அந்த அறையின் சூழ்நிலையைக் கவனித்தான்.

அறையின் மூலையிலே கிடந்த சிறிய மேஜைமீது ஒரு ஹரிக்கேன் விளக்கு மங்கிய ஒளியைப் பரப்பிக் கொண்டிருந்தது;அந்தமங்கிய ஒளிமூட்டத்தில் அந்த அறை ஏதோ ஒரு சொப்பனத் தரிசனம் போல் மணிக்குக் காட்சியளித்தது. அந்த அறையின் சுவர்களைப் பல தலைவர்களின் சித்திரங்கள் அலங்கரித்தன;வாசல்புறத்தில் பல துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டநோட்டீஸ்போர்டு ஒன்று தொங்கியது. அதற்கு அருகில் ஒரு மெகபோன் குழல் தொங்கிக் கொண்டிருந்தது. அறையின் ஒரு மூலையில் ஒரு மண் பானையும், இன்னொரு மூலையில் கிழிந்த காகிதங்களும், கரிந்த தீய்ந்த சிகரெட் துண்டுகளும், தீக்குச்சிகளும் கிடந்தன. சுவரையொட்டியிருந்த அலமாரியில் பற்பல பைல்களும் புத்தகங்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

மணி தன் கண்களை மூடினான்; எனினும் மனம் மட்டும் மூடவில்லை. அவன் மனம் சென்றுபோன நாட்களை எண்ணியது. கடந்த காலத்தில் தான் எத்தனை துன்பங்கள்! அனுபவங்கள்! படிப்பினைகள்!.

திருநெல்வேலியை விட்டு இரவோடு இரவாய் ஓடிவந்த மணி ரயிலில் வரும்போதே தன் எதிர்காலத்தைத் திட்டமிட்டான். இருளின் அந்தகாரத்திலே தாள லயத்தோடு ஆடிக் கொண்டு சென்ற ரயிலைப் போலவே