பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

253


மனிதர்களை, ஒரு அணாக் காசுக்காக வெட்டுப்பழி குத்துப்பழியில் விமோசனம் தேடும் மக்களை, ஒரு நேரக் கஞ்சிக்காக உடம்பை அடகு வைக்கும் ஏழைப் பெண் மக்களை, பசிதாங்க முடியாது அரையணாப் பண்டத்தைத் திருடிவிட்டு அடி வாங்கி நைகின்ற ஜனங்களை - அவன் கண்டான்; பழகினான். ஆனால், அந்தக் குரூர சக்தி கொண்ட உயிர் வாழும் போரில் ஈடுபட்டிருந்த அதே மக்களிடம் அவன் கருணையைக் கண்டான்; மானாபிமானத்தைக் கண்டான். தரும சிந்தையைக் கண்டான்; நட்புரிமையைக் கண்டான்.

அந்த ஜனங்களின் உடம்பு வியர்வை பற்றி நாறியது; உடைகள் அழுக்குப் பற்றி நாறின; வாயும் நாவும் அசிங்கமான வார்த்தைகளைக் கக்கி நாறின; எனினும் அவர்தம் உள்ளங்களிலிருந்து திடீரென்று அவ்வப்போது நற்குணங்கள் பரிமளகந்தம் போல் வீசிப் பரவுவதையும் அவன் அனுபவித்தறிந்தான்.

'லட்ச லட்சமாகப் பணமிருந்தும், உழைப்பவனுக்குக் கிடைக்கும் ஓரணாக் காசையும் தட்டிப் பறிக்க எண்ணும் பிச்சைக்காரப் புத்தி அவர்களிடம் இல்லை; தங்கள் சொத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக, நாகரிகமாகப் பொய்கள் சொல்லி, நயவஞ்சகம் செய்யும் சின்னப்புத்தி அவர்களிடம் இல்லை. அவர்கள் பொய் சொன்னார்கள்: சண்டை பிடித்தார்கள்; திருடினார்கள்; சோரம் போனார்கள். எனினும் அத்தனையும் ஒரு சாண் வயிற்றைக் கழுவுவதற்காகத் தான் செய்தார்கள். தம் வயிறு நிறைந்து இருக்கும் சமயங்களில் அவர்கள் அந்தக் குரூர வாழ்க்கையை அதன் கோரங்களை வெறுத்தார்கள்; தம் செய்கைகளுக்காக வருந்தினார்கள்.

கடைத்தர வாழ்க்கையின் அத்தனை குரூரங்களையும் பயங்கரங்களையும், இழிதன்மைகளையும் அவன் கண்டான். அந்த வாழ்க்கைக்கும் தான் கனவு கண்ட வாழ்க்கைக்குமுள்ள வித்தியாசத்தையும் கண்டுணர்ந்தான்.