பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

257


"நீங்கள் சொல்வது சரிதான் என்று ஆமோதித்தது அவன் வாய். தன் கஷ்டங்களுக்குரிய காரணத்தை அவன் இத்தனை ஸ்தூலமாக இதற்கு முன்னர் தொட்டுணர்ந்ததில்லை.

"இந்த உண்மையை மட்டும் நீங்கள் உணர்ந்து விட்டால், அப்புறம் தற்கொலையிலோ, ஊரை விட்டு ஓடுவதிலோ அர்த்தமேயில்லை என்பதையும் அறிந்து கொள்வீர்கள். நானும் உங்களைப்போல் பல துன்பங்களை, கொடுமைகளை அனுபவித்திருக்கிறேன்; பசி, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் அத்தனையிலும் அடிபட்டுக் காய்ந்திருக்கிறேன். ஆனால், உயிர் வாழும் வேட்கையும், தைரியமும் தான் என்னை வாழ வைத்தன. நமது கஷ்டங்களுக்குரிய காரணத்தைக் கண்டறிந்து அதை அழிக்க முயலவேண்டுமே ஒழிய நம்மை நாமே அழித்துக் கொள்ளக் கூடாது; அந்தக் காரணத்தை அறிந்து அழிக்க முயலும் முயற்சியில் நாம் அழிந்து போனாலும் பரவாயில்லை; நாம் அழிந்தாலும் நம்மைச் சார்ந்தவர்களும் சந்ததியார்களும் வாழ்வார்கள் என்ற திருப்தியாவது நமக்கு உண்டாகும். அதுதான் மனிதவாழ்க்கை!"

மணி அவரது பேச்சின் அழுத்த பாவத்திலும், உறுதியிலும், கவர்ச்சியிலும் தன்னையுமறியாமல் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.அவரது பேச்சு அவன் மனத்தில் புதியதொரு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் உருவேற்றுவது போலிருந்தது.

"மிஸ்டர் மணி, நீங்களும் பாதிக்கப்பட்ட ஒரு 'நெசவாளிக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே உங்களோடு இவ்வளவு உரிமையோடும் அக்கறையோடும் பேசுகிறேன், உங்கள் குடும்பமும் உங்கள் வாழ்வும் சீர்குலைந்ததற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? இந்தச் சர்க்காரின் ஜவுளிக்கொள்கை தான் அடிப்படைக்காரணம். அதன் காரணமாகத் தான் இன்று பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் சீரழிகின்றன. இந்த நிலைமையை மாற்று