பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258


வதற்காகத் தான் இங்குள்ள நெசவாளிகள் போராடுகிறார்கள். இது போல் நாடெங்கிலும் போராட்டம் பரந்து விரிந்து பலம் பெற்று விட்டால், ஒன்று இந்த சர்க்காரின் ஜவுளிக் கொள்கை மாறும், அல்லது இந்த ஆட்சி மறையும். உலகத்தை வாழ வைக்க முடியும் என்ற நம்பிக்கையில்தான் என்போன்ற ஊழியர்கள் எவ்வளவோ சிரமங்களைத் தாங்கிப் போராடி வருகிறோம்."

ராஜு கூறியதை மணியால் மறுக்க முடியவில்லை; அவன் அவர் கூற்றை ஆமோதித்தான். பின்னர் ராஜூ அவனுக்கும் சர்க்காரின் ஜவுளிக் கொள்கை பற்றியும் அரசியல் கொள்கை பற்றியும் விளக்கிச் சொன்னார். அதைக் கேட்கக் கேட்க அவன் உள்ளம் தன் தந்தையின் மரணத்துக்குரிய பிரதான காரணத்தின் ஜீவநாடியைத் தொட்டறிந்தது; தான் வேலை கிடைக்காமல் திண்டாடியதற்கும், பசியால் வாடியதற்கும், மயங்கி விழுந்ததற்கும் உரிய காரணத்தின் மூலாதாரத்தைக் கண்டறிந்தது; கடந்த காலத்தில் தன்னோடு பழகி வந்த ஏழை மக்களின் இறுமைக்கும் இழி நிலைமைக்கும் குரூர வாழ்க்கைக்கும் காரணமான விஷ மூலம் எங்கிருக்கிறது என்ற உண்மை யையும் கண்டுணர்ந்தது.

அந்த உணர்வு அவன் மனத்தில் ஊற ஊற, அவனது இதயத்தை இறுக்கிப் பிணித்திருந்த பல்வேறு விதமான சந்தேகங்கள், குழப்பங்கள், முடிவுகள் எல்லாம் இற்றுத் தேய்ந்து அறுபடுவது போல் அவனுக்குத் தோன்றியது. அந்த தளைகளின் பிடிப்புத் தளரத் தளர, அவன் உள்ளத்திலே புகைமூடிப் பூத்துக் கிடந்த தர்மாவேச உணர்ச்சி சத்திய வேட்கை கொண்டு விம்மிப் புடைத்து விகசித்துப் பரந்தது. அவன் கண்களில் புதியதொரு ஒளிசுடர் விட்டது.

திடீரென்று அவன் ராஜுவை நோக்கிக் கேட்டான்: "உங்கள் போராட்டத்தில் நானும் கலந்து கொள்ளக் கூடாதா?"