பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264


ஆற்றியவர்கள். தேசிய இயக்கப் போராட்டக் காலத்தில் மதுரை மக்கள் பெரும் பணியாற்றிருந்தார்கள். மேலும், வர்க்க போதம் பெற்று ஆலைத் தொழிலாளி மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் பல முறை போராட்டத்தில் ஈடுபட்ட பெருமையையும் வீரத்தையும் கண்டறிந்த நகரம் மதுரை. 'நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே!' என்று நிமிர்ந்து நின்று சொன்ன நக்கீரன் பரம்பரையை, போலீஸாரின் சித்திரவதைக் கொட்டடியில் செத்துமடிந்த போதும், போற்றிக் காத்துப் போராடிய வீரர்களைக் கண்ட நகரம் மதுரை, 'இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே!' என்று அறைகூவி, அரண்மனையின் கட்டும் காவலும் கடந்து, பாண்டிய மன்னனின் நீதிமண்டபத்திலே நிமிர்ந்து நின்று நியாயம் கேட்ட கண்ணகியின் வழி நின்று தமக்காகவும், தங்கள் கணவன், பிள்ளைமார்களுக்காகவும் போர்க்கொடி ஏந்திச் சீறியெழுந்த வீராங்கனைகளைப் பெற்றெடுத்த பெருமையைக் கண்ட மதுரை மாநகரம், தூக்குமேடையிலே ஏறும் போதும், துளிக்கூடக் கண்ணீர் சிந்தாமல் புன்னகையோடு உயிர் நீத்த தியாகிகளைப் பிறப்பித்துத் தந்த ஊர் மதுரை.

அரசியலுணர்வும் தேசபக்தியும் வர்க்க போதமும் நிறைந்து விளங்கும் மதுரை நகரம் மணியின் ஆத்ம சக்தியையும் அறிவையும் விரைவில் பலப்படுத்துவதற்குப் பெரிதும் உதவியது. அவன் மதுரையில் இருந்த காலத்தில் ஹார்வி மில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. தொழிலாளர்களின் சேவிங்ஸ் நிதிப் பணத்தை அவர்களுக்குக் கொடுத்துதவ மறுத்து வந்த ஹார்வியை, அந்தத் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு நின்று ஒரு முகமாகப் போராடி, அந்தப் பணத்தைக் கீழே வைக்கும் படி நிர்ப்பந்தித்து வெற்றி கண்டதையும் அவன் கண்டான். கோடி கோடியாகப்பணம் குவிந்துக் கிடந்தாலும், குசேலப் பிறவிகளான மக்கள் ஒன்றுபட்டுக் கொதித்தெழுந்தால், எந்தக் குபேரன்