பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

273


மேலேறிச் சென்று கொண்டிருந்தது சூரியக் கதிர்; நீண்டு கிடந்த மரங்களின் நிழல்களெல்லாம் தாமும் அந்த வரவேற்பில் பங்கு கொள்ள விரும்புவது போல் வயற் புறங்களிலிருந்து நீளம் சுருங்கி, சாலையை நோக்கிக் குறுகி வந்து கொண்டிருந்தன; சாலைப்புறத்தில் கூடி நின்ற மக்களின் தொகையும் நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகரித்து வந்தது.

எட்டரை மணி சுமாருக்கு, மங்கம்மாள் சாலையின் தென் கோடியில் கிணற்றுக்குள்ளிருந்து எழுப்பும் குரலைப் போல் ஆரவார ஒலி கேட்டது; அந்த மங்கிய ஆரவாரம் அங்கு நின்று கொண்டிருந்த மணியின் மனதில் ஏதோ ஒரு தெய்வீக நாதம் போல் ஒலித்து விம்மியது. அவன் கண்களை அகல விரித்துக் கொண்டு வைத்த கண் வாங்காமல், இமை தட்டாமல், மங்கம்மாள் சாலைத் தொலைவில் கண் பதித்து நின்றான். சிறிது நேரத்தில், தூரத்தில் செம்மண் புழுதிப் படலம் மரச் செறிவையும் கடந்து, செக்கர் ஒளிபோல் வான மண்டலத்தில் பரவுவதை அவன் கண்டான்; செக்கச் சிவந்த செம்மண் மண்டலத்திலிருந்து, யாக குண்டப் புகையிலிருந்து கிளம்பி வரும் பூத உருவங்களைப்போல், மனித உருவங்கள் தோன்றி முன்னேறி வருவதையும் அவன் கண்டான்.

"அதோ வந்து விட்டார்கள்!" என்று அவனையும் அறியாமல், அவன் வாய்விட்டுக் கூறி மகிழ்ந்தான். அவனுடைய காலும் கையும் கட்டிப் போடப்பட்ட பந்தயக் குதிரையைப் போல் துறுதுறுத்தன; அவன் இதயம், அவர்களை எதிர் கொண்டு அழைக்கப்போகும் உற்சாகத்தில் நிதானகதி இழந்து படபடத்துத் துடித்தது; அவன் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டு நின்றான்...

பட்டினிப் பட்டாளம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. போர் முகத்தை நோக்கிச் செல்லும் முன்னணி வீரர்களைப் போல் அந்தப் பட்டாளத்தினர் முன்னேறி வந்து கொண்டிருந்தார்கள்; அவர்கள்