பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274


அருகில் வந்து சேர்வதற்கு முன்பே அவர்கள் கர்ஜித்து வரும் கோஷங்களின் இடிமுழக்கம் அவர்கள் வரவைத் தூது சொல்லி எதிரொலித்தது.

"வாழப்பிறந்தோம்.சாகமாட்டோம்!"

"வேலைகொடு அல்லது சோறு கொடு!"

"போராடுவோம் வெற்றிபெறுவோம்!"

போராடுவோம் வெற்றிபெறுவோம்!"

புயலின் வரவை முன்னறிவித்து ஹூங்காரித்து முன்னேறி வரும் சூறைக்காற்றின் ஓலத்தைப்போல், அந்த கோஷங்களின் முழக்கவொலி நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகரித்துக் கொண்டிருந்தது; சாலைப்புறத்தில் கூடி நின்ற மக்களெல்லாம் அந்த முழக்கவொலி கேட்டுச் சுறு சுறுப்படைந்தார்கள்.

அவர்கள் வந்து விட்டார்கள்_

அந்தப் படை வரிசைக்கு முன்னணியில் "வாழப் பிறந்தோம்;சாகமாட்டோம்!"என்ற எழுத்துக்கள் பொறித்த பதாகை கட்டியம் கூறி முன்னேறி வந்தது. அந்த வீரப்பதாகையின் நிழலில் பட்டாளத்தின் தலைவர் வந்து கொண்டிருந்தார். தலைவரைப் பின்தொடர்ந்து, தமது போர்க் கோஷங்களை முழக்கிக் கொண்டு கட்டுத் தறிகளையும் விலங்குகளையும் உடைத்தெறிந்துவிட்டு வருகின்ற மத்த கஜப் படைகளைப்போல், நெசவாள வீரர்கள் வந்து கொண்டிருந்தார்கள். பட்டாளத்தினர் அருகே நெருங்கி வந்ததும், கூட்டத்தினர் அலைமோதிச் சாடிக்கொண்டு அவர்களை எதிர்கொண்டு அழைக்க முன்னேறினர். போர் முனையில் இருவேறு திசைகளிலிருந்து வந்து ஒன்று கலக்கும் சகோதரப் பட்டாளங்களைப் போல, மதுரை நகர மக்களும் பட்டினிப் பட்டாளத்தினரும் சந்தித்தனர்.