பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

275


"வாழப் பிறந்தோம்" என்று பட்டினிப் பட்டாளத்தார் கோஷம் எழுப்பினார்கள்.

"சாகமாட்டோம்!" என்று கடலலை பொங்கியது! போல் எதிரொலி கிளப்பினர் மதுரை மக்கள்.

மணி ஓடோடியும் முன் சென்று, பட்டினிப் பட்டாளத்தின் தலைவருக்கு மாலையிட்டான். மக்களின் ஆரவாரம் சாலை மரங்களிலெல்லாம் மோதி எதிரொலித்தது. மணியைத் தொடர்ந்து பற்பல சங்க நிர்வாகிகளும், தொழிலாளிகளும் பட்டினிப் பட்டாளத்தின் தலைவருக்கும், படையினருக்கும் மாலைகள் சூட்டி வரவேற்றனர்.

மணியின் உள்ளம் அந்தப் பட்டாளத்தினரைச் சந்தித்தது முதற்கொண்டு இன்னதென அறிய முடியாத இன்ப உணர்ச்சிக்கும், பரபரப்புக்கும் ஆளாகிப் புளகித்தது. இன்னது பேசுவதெனத் தெரியாமல், அவர்களிடம் தொடர்பற்றுப் பல கேள்விகளைக் கேட்டு விசாரித்துக் கொண்டான்.

சிறிது நேரத்தில், பட்டாளத்தினரும், கூடியிருந்த மதுரை மக்களும் அங்கிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, கோஷங்களை முழக்கிக்கொண்டு நகரை நோக்கிக் கிளம்பினர்.

"வாழப்பிறந்தோம். சாகமாட்டோம்!"

"வேலைகொடு அல்லது சோறுகொடு!"

மதுரை நகரின் பிரதான வீதிகளில் இந்த முழக்கங்கள்' விம்மியெழுந்தன, சூறைக் காற்றைப் போல் கோஷித்துக் கொண்டு அலைபுரண்டு வரும் கட்டாற்று வெள்ளம் போல் முன்னேறிக் கொண்டு பட்டினிப் பட்டாளத்தார் மதுரை நகரை வலம் வந்தார்கள்; அந்த போர்ப் படையினரின் கோஷம், நீண்டு வளர்ந்த மதுரை நகரத்தின் கட்டிடங்களுக்குள்ளும், கட்டிடங்களுக்குளே சுசுவாசம் செய்யும் மனிதர்களின் உள்ளத்துக்குள்ளும் புகுந்து மோதியது.