பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276


ஆயிரமாயிரம் மக்கள் நகர வீதிகளின் இருமருங்கிலும் கூடி நின்று, பட்டினிப் பட்டாளத்தை வரவேற்றார்கள்; பட்டினி பட்டாளத்தாரின் கோஷங்களைத் தாமும் கோஷித்தார்கள்; பலர் அந்தப் பட்டாள அணிகளோடு கலந்து கொண்டார்கள்.

அந்தப் பட்டாளத்தின் முன்னணியில் நின்று மணியும், ராஜுவும் கோஷங்களிட்டுச் சென்றார்கள்; அந்தக் கோஷங்களைத் தான் சொல்லி முடிந்தபின், அந்தக் கோஷங்களுக்கு எதிரொலியாக அணி வகுப்பிலிருந்து எழுந்து அலை மோதித் திரண்டு வரும் எதிரொலியைக் கேட்டு, மணியின் உள்ளம் சிலிர்த்தது; உடம்பில் என்றுமில்லாத புதுப் பலமும், உணர்ச்சியும் ஊறிப் பெருகித் ததும்புவது போல் அவனுக்குத் தோன்றியது.

ஆவணி வீதியின் ஈசான மூலை கடந்ததும், பட்டாளத்தின் முன் வரிசையிலிருந்த ஒரு ஊழியர் மெகாபோன் மூலம் மக்களுக்கு அறிவித்தார்.

"மதுரைமக்களே! இந்த அரசாங்கம் நெசவாளர்களின் வயிற்றில் அடித்துவிட்டது. அவர்கள் தம் வாழ்க்கைக்காகப் போராடி முன்னேறி வருகிறார்கள்; அருப்புக்கோட்டை, சாத்தூர், சீவில்லிப்புத்தூர் முதலிய ஊர்களிலிருந்து இந்த நெசவாளிகள் பட்டினிப் பட்டாளமாகக் கிளம்பி, சென்னை நோக்கிக் கால் நடையில் செல்கிறார்கள். சிங்கத்தின் குகையிலேயே சிங்கத்தோடு போராடுவது போல், இவர்கள் தம்மை வஞ்சித்த அரசியலாரோடு உரிமைக்காகப் போராடுவதற்காக, இந்தப் புனித யாத்திரையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களை வரவேற்று உபசரித்து ஆதரவளித்து வழியனுப்பி வைப்பது நம் கடமை. எனவே, எல்லோரும் இவர்களுக்கு உணவு வழங்குவதற்காகவும், வழிச் செலவுக்குக் கொடுத்து உதவுவதற்காகவும் பொருளுதவி செய்ய வேண்டுகிறோம்...."

ஊழியரின் அறைகூவல் வீண் போகவில்லை. கோஷமிட்டு முன்னேறிச் செல்லும் பட்டாளத்தினருக்குத்