பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278


பட்டாளத்திலிருந்த நெசவாளர்கள் பலரும் மானத்தோடு பிழைத்து வந்தவர்கள். தங்கள் குடும்பத்தின் கஷ்ட நிலைமைகளையும் பசிக் கொடுமையையும், அவர்கள் வெளியே தெரியாமல் மறைத்து வைத்து, மானத்தோடும், கௌரவத்தோடும் வாழ முயன்றார்கள். ஆனால் பசித்து அழும் குழந்தை குட்டிகளின் முகங்களும், குழந்தைகளுக்குப் பதில் சொல்ல வகையற்று வாயடைத்துக் கண்ணீர் விட்டு நிற்கும் மனைவிமார்களின் முகங்களும்தான் அவர்களைத் தன்னுணர்வு கொள்ளச் செய்தன. உள்ளுக்குள்ளேயே சூடேறிச் கொண்டு வரும் தண்ணீர் எப்படித் தன் கொதிநிலை வந்ததும் திடீரென்று கொப்புளங்களை வாரியிறைத்துத் துள்ளிக் குதித்துக் கொதிக்க ஆரம்பிக்கிறதோ, அதேபோல, அவர்கள் மனத்துக்குள்ளாகவும் நித்த நித்தம் சூடேறிக் கொதித்து வந்த அவர்களது கஷ்ட நிலைமை அவர்களை ஒரு நாள் கொதித்தெழச் செய்துவிட்டது; கொதிக்கின்ற தண்ணீரைப் போல் அவர்கள் குமுறியெழுந்து தங்கள் விமோசனத்துக்காகப் போராட முன்வந்தார்கள். தங்கள் கோரிக்கைகளை அரசாங்கத்துக்குத் தெரிவித்தார்கள்; ஆனால், அதற்கு எந்தவிதப் பிரதிபலனையும் பெறாத காரணத்தால், தலைநகருக்கே சென்று போராடுவது என்று துணிந்து புறப்பட்டு விட்டார்கள்.

அந்தப் பட்டாளத்தில் வாலிபர்கள் இருந்தார்கள்; வயோதிகத்தன்மையை எட்டிப் பிடித்தவர்களும் இருந்தார்கள்; அரசியல் உணர்ச்சி கொண்டவர்கள் இருந்தார்கள்; அரசியலின் போக்கை அறியாதவர்களும் இருந்தார்கள், தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள் இருந்தார்கள் தெய்வ நம்பிக்கை அற்றவர்கள் இருந்தார்கள்; காங்கிரஸ் தலைவர்கள் மீது விசுவாசம் இழந்தவர்களும் இருந்தார்கள்; இழக்காதவர்களும் இருந்தார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் தங்கள் கஷ்டங்களைப் போக்க இந்த சர்க்கார் வேண்டிய முயற்சிகளைச் செய்யவில்லை என்ற